சென்னை: பல்கலைக்கழக விவகாரங்களில் தலையிடுவதற்கு உயர் கல்வித்துறை செயலாளர் எந்தவித அதிகாரமும் இல்லை எனவும், சென்னை பல்கலைக்கழகத் தேர்வு முரணாக வெளியிட்ட அறிவிப்பை திரும்ப பெற வேண்டுமென தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சென்னைப் பல்கலைக்கழகத்தின் வேந்தரும், தமிழ்நாடு ஆளுநருமான ஆர்.என்.ரவி 6.9.2023 தேதியிட்ட அறிவிப்பை வெளியிட்டு, பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை நியமனம் செய்வதற்கான நபரை அடையாளம் காண்பதற்கான தேடல் மற்றும் தேர்வுக் குழுவினை அறிவித்தார். மேலும், அது ஆளுநர் மாளிகையின் இணையதளத்திலும் வெளியிடப்பட்டது.
மேலும் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தப்பட்டது. இந்த நிலையில், உயர் கல்வித்துறையின் அரசு முதன்மைச் செயலர், யுஜிசி தலைவரின் பரிந்துரையைத் தவிர்த்து, தேடல் மற்றும் தேர்வுக் குழுவின் மேலும் அறிவிப்பை வெளியிட்டு, 13.9.2023 அன்று அரசிதழில் முறைகேடான செயலால் வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை கடைப்பிடிக்காமல் மற்றும் அதை மீறும் வகையில், சென்னை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் தேடுதல் குழுவில் அரசிதழில் 13.9.2023 வெளியிட்டுள்ள அறிவிப்பு, யுஜிசி விதிமுறைகள் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு முரணானது.
உயர் கல்வித் துறை அரசு முதன்மைச் செயலருக்கு பல்கலைக்கழக விவகாரங்களில் எந்தப் பங்கும் இல்லை என்றும், தமிழக அரசின் சிறப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள அந்த அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என வேந்தர் கேட்டுக் கொண்டுள்ளார்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, தமிழ்நாட்டில் உள்ள சென்னை பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் கல்வியியல் பல்கலைக்கழகம் என 3 பல்கலைக்கழங்களின் துணைவேந்தர்களை தேர்வு செய்வதற்கு முதல் முறையாக பல்கலைக் கழக மானியக்குழுவின் பிரதிநிதியையும் சேர்த்து தேடுதல் குழுவை அமைத்து தமிழ்நாடு ஆளுநரும், பல்கலைக்கழங்களின் வேந்தருமான ஆர்.என்.ரவி செப்டம்பர் 6ஆம் தேதி அறிவித்தார்.
தமிழ்நாட்டில் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நியமனம் செய்வதற்கான தேடுதல் குழுவில் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர், தமிழக அரசின் பிரதிநிதி, ஆளுநரின் பிரதிநிதி என மூன்று பேர் மட்டுமே தற்பொழுது இருந்து வருகின்றனர். எனவே, இது தொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் மாளிகை செப்டம்பர் 6ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், “சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தேடுல் குழுவை அமைைத்து தமிழ்நாடு ஆளுநர் மாளிகை செப்டம்பர் 6ஆம் தேதி www.tnrajbhavan.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
துணைவேந்தர் தேடுதல் குழுவில் 4 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு ஆளுநரின் பிரிதிநியாகவும், குழுவின் தலைவராகவும் கர்நாடக மத்தியப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சத்தியநாராயணா, சிண்டிகேட் உறுப்பினராக மாநிலத் திடடக்குழுவின் உறுப்பினர் ஒய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி தீனப்பந்து, செனட் உறுப்பினராக பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் ஜெகதீசன், பல்கலைக் கழக மானியக்குழுவின் உறப்பினராக தெற்கு பீகார் மத்தியப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் HCS ரத்தோர் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
துணைவேந்தர் நியமனம் செய்தவதற்கான 3 பேர் பட்டியலை இவர்கள் தேர்வு செய்து அளிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், தமிழ்நாடு அரசின் உயர் கல்வித்துறை செயலாளர் கார்த்திக், செப்டம்பர் 13ஆம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், “தமிழ்நாடு ஆளுநரின் பிரிதிநியாகவும், குழுவின் தலைவராகவும் கர்நாடக மத்தியப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சத்தியநாராயணா, சிண்டிகேட் உறுப்பினராக மாநிலத் திடடக்குழுவின் உறுப்பினர் ஒய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி தீனப்பந்து, செனட் உறுப்பினராக பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் ஜெகதீசன் ஆகியோர் மட்டுமே நியமனம் செய்யப்பட்டதாக அறிவித்தார்.
பல்கலைக் கழக மானியக்குழுவின் உறப்பினராக தெற்கு பீகார் மத்தியப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் HCS ரத்தோர் நியமனம் குறித்து அரசிதழில் எந்தவித தகவலும் வெளியிடப்படவில்லை. இந்த நிலையில், பல்கலைக்கழகத்தின் வேந்தரும் தமிழ்நாடு ஆளுநருமான ஆர்.என்.ரவி அரசிதழில் வெளியிடப்பட்ட அறிவிப்பை திரும்பப் பெற வேண்டுமென தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஆளுநர் நியமனம் செய்த துணைவேந்தர் தேடுதல் குழு மாற்றியமைப்பு - அரசிதழில் வெளியிட்ட தமிழக அரசு!