சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 3 பல்கலைக்கழங்களின் துணைவேந்தர்களை தேர்வு செய்வதற்கு முதல்முறையாக பல்கலைக்கழக மானியக்குழுவின் பிரதிநிதியையும் சேர்த்து தேடுதல் குழுவை அமைத்து தமிழ்நாடு ஆளுநரும், பல்கலைக்கழங்களின் வேந்தருமான ஆர்.என்.ரவி அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் துணைவேந்தர் பதவி நிரப்பப்படாமல் கடந்த ஒரு ஆண்டாக காலியாக இருந்தது. மேலும், கடந்த மாதம் சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் பதவியும் காலியானது.
இந்த பல்கலைக்கழகங்களுக்கான துணைவேந்தர் தேடுதல் குழுவில் பல்கலைக்கழக மானியக் குழுவின் பிரதிநிதியைச் சேர்க்க வேண்டும் என ஆளுநரின் நிபந்தனையால் துணைவேந்தர் நியமனத்திற்கான குழு அமைப்பதில் தாமதம் ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசு சார்பில், பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிகளின்படி, மாநில பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தரை நியமிக்க பல்கலைக்கழக விதிகளை மட்டும் பின்பற்றினால் போதுமானது எனவும், யுஜிசி சார்பில் உறுப்பினரைச் சேர்க்க வேண்டும் என்ற கட்டாய விதிமுறை இல்லை என ஏற்கனவே ஆளுநர் மாளிகைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நியமனம் செய்வதற்கான தேடுதல் குழுவில் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர், தமிழக அரசின் பிரதிநிதி, ஆளுநரின் பிரதிநிதி என மூன்று பேர் மட்டுமே தற்போது இருந்து வருகின்றனர். இந்த நிலையில் முதல்முறையாக பல்கலைக்கழக மானியக்குழுவின் உறுப்பினர் ஒருவரும் சேர்த்து நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து தமிழ்நாடு ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சென்னை பல்கலைக்கழகம்:சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தேடுதல் குழுவை அமைத்து தமிழ்நாடு ஆளுநர் மாளிகை இன்று, www.tnrajbhavan.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. துணைவேந்தர் தேடுதல் குழுவில் 4 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு ஆளுநரின் பிரிதிநியாகவும், குழுவின் தலைவராகவும் கர்நாடக மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சத்தியநாராயணா, சிண்டிகேட் உறுப்பினராக மாநிலத் திட்டக்குழுவின் உறுப்பினர் ஒய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி தீனப்பந்து, செனட் உறுப்பினராக பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் ஜெகதீசன், பல்கலைக்கழக மானியக்குழுவின் உறப்பினராக தெற்கு பிகார் மத்தியப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் HCS ரத்தோர் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
பாரதியார் பல்கலைக்கழகம்:கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தேடுதல் குழுவில் 4 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு ஆளுநரின் பிரதிநிதியாகவும், குழுவின் தலைவராகவும் ஒய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி P.W.C. டேவிதர், சிண்டிகேட் உறுப்பினராக சென்னை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் துரைசாமி, செனட் உறுப்பினராக சென்னை மற்றும் பாரதியார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் திருவாசகம், பல்கலைக்கழக மானியக்குழுவின் உறப்பினராக பெங்களூர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் திம்மே கவுடா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம்: தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தேடுதல் குழுவில் 4 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு ஆளுநரின் பிரதிநிதியாகவும், குழுவின் தலைவராகவும் பல்கலைக்கழக மானியக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் சுஷ்மா யாதவ், தமிழ்நாடு அரசின் பிரதிநிதியாக ஒய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி அலாவூதின், சிண்டிகேட் உறுப்பினராக தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பத்மநாபன், பல்கலைக்கழக மானியக்குழுவின் உறுப்பினராக தெற்கு பிகார் மத்தியப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் HCS ரத்தோர் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மூன்று பல்கலைக்கழகங்களுக்கும் துணைவேந்தர் நியமனம் செய்வதற்கான 3 பேர் பட்டியலை இவர்கள் தேர்வு செய்து அளிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:“பிரம்மாண்ட நடராஜர் சிலை இந்தியாவின் கலைத்திறனுக்கு ஒரு சான்றாக அமையும்" - பிரதமர் மோடி பெருமிதம்!