சென்னை: தலைமைச் செயலகத்தில் மூன்றாவது நாள் சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதியரசர் அருணா ஜெகதீசன் ஆணையம் தொடர்பாகத் தமிழக முதலமைச்சர் விவாதத்தை முன்மொழிந்தார்.
இதைத் தொடர்ந்து பேசிய தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன்: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் என்பது மக்கள் மீது அரசு தெரிந்தே வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டிருப்பதாகவும், மக்களைக் குறிவைத்து காக்கைகளைச் சுடுவது போலச் சுட்டுத் தள்ளியதாகவும், மனித படுகொலையை நடித்திருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி செய்தியாளர்கள் சந்திப்பில், "ஓ அப்படியா" துப்பாக்கிச் சூடா நடந்திருக்கிறதா, டிவி பார்த்து தான், அதனைத் தெரிந்து கொண்டதாகக் கூறினார். இது முதலமைச்சர் பதவிக்கு அவமானகரமானது.
மக்கள் மீதான வன்முறையில் ஈடுபட்ட மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், தென் மண்டல ஐஜி, வருவாய்த்துறை அதிகாரிகள் உள்ளிட்ட 17 பேர் மீது, தற்போது அவர்கள் எந்த உயர் பதவியிலிருந்தாலும் அவர்களை சஸ்பெண்ட் செய்து அவர்கள் மீது குற்ற வழக்குப் பதிந்து கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் எனத் தமிழக அரசுக்குக் கோரிக்கை வைத்தார். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 50 லட்ச ரூபாய் நிவாரணம் அரசு வழங்க வேண்டும் என்றும் கூறினார்.
ஜவாகிருல்லா (மமக): தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்ட அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் அடிப்படையில், அதில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் அனைவரின் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்ற காலத்தில் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்தார். மக்களைப் பாதுகாக்க வேண்டியவர், அதிலிருந்து தவறியதால் அவர் மீது குற்றவியல் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
சி பி ஐ சட்டமன்ற உறுப்பினர் தளி ராமசந்திரன்:வேண்டுமென்றே 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அப்போதைய முதல்வர் தொலைக்காட்சியைப் பார்த்துத் தான் இந்த சம்பவத்தைத் தெரிந்து கொண்டேன் என்று சொன்னது வெட்கக் கேடானது. 17 காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உட்பட 4 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவேண்டும் என்றார்.