சென்னை: இது குறித்து இன்று (மே 25) வெளியிடுள்ள செய்தி குறிப்பில், 'தமிழ்நாட்டின் அரசு வளர்ச்சி திட்டப் பணிகளை கண்காணிக்க மாவட்ட வாரியாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமனம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி ஏற்கனவே, 25 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கூடுதலாக 12 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் புதிய அணைகள் கட்டும் பணி, குடிமராமத்து, நீர்நிலைகளை மீட்டெடுத்தல், பிளாஸ்டிக் ஒழிப்பு, நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், சிறப்பு திட்டங்களை செயல்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை கண்காணிக்க அதிகாரிகளை நியமனம் செய்துள்ளனர்.
பிளாஸ்டிக் ஒழிப்பு, மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, வெள்ளநீர் தடுப்பு நடவடிக்கை, திடக்கழிவு மேலாண்மை, ஊரக பகுதி மக்களுக்கான அடிப்படை வசதி தேவைகள் உள்ளிட்ட பணிகளையும் கண்காணிப்பார்கள் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட நிர்வாகத்துடன் கண்காணிப்பு அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: "ஆவின் பால் கொள்முதலை பாதிக்கும் வகையில் அமுல்" - அமித் ஷாவுக்கு ஸ்டாலின் கடிதம்!
அரசாணையின்படி, அரியலூா் மாவட்டத்துக்கு சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை செயலா் அருண்ராயும், கோயம்பத்தூர் மாவட்டம் டிட்கோ நிா்வாக இயக்குநா் ஜெயஸ்ரீ முரளிதரன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு நெடுஞ்சாலைகள் துறை கூடுதல் தலைமைச் செயலா் பிரதீப் யாதவும், காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு ஊரக வளா்ச்சித் துறை முதன்மைச் செயலா் பி.செந்தில்குமாரையும் நியமனம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.