சென்னை: டெல்டா மாவட்டங்களில் உள்ள காவிரி துணைப் படுகையில் உள்ள நீர்ப்பாசன முறையின் நீர்ப்பாசன விரிவாக்கம், புதுப்பித்தல் மற்றும் நவீனமயமாக்கல், துணை ஆறுகளை மேம்படுத்த மூன்றாயிரத்து 159 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
காவிரி துணை ஆறுகளை மேம்படுத்த நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு
டெல்டா மாவட்டங்களில் உள்ள காவிரி துணை ஆறுகளை மேம்படுத்த மூன்றாயிரத்து 159 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், "டெல்டா மாவட்டங்களில் பாசன அமைப்புகளை விரிவுபடுத்துதல், புதுப்பிதல், நவீனப்படுத்துதல் திட்டத்தின் கீழ், 15க்கும் மேற்பட்ட காவிரி துணை ஆற்றுப் படுகைகளில் 31 திட்டங்களை செயல்படுத்த 3159 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. நபார்டு வங்கியின் கடனுதவியுடன் இந்தப் பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டு, அதற்கான அரசாணையை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
காவிரியின் துணை ஆறுகளில் தடுப்பணைகள், மதகுகள், தடுப்புச்சுவர்கள் உள்ளிட்டவை கட்டப்பட்டு, பருவமழைக் காலத்தில தண்ணீரை சேமிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இரண்டு ஆண்டுகளுக்கு பணியினை முடிக்கவும் அலுவலர்களுக்கு உத்தவிடப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.