சென்னை: வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மிக்ஜாம் புயலாக வலுப்பெற்று, சென்னைக்கு அருகில் நிலை கொண்டிருந்தது. இதனால் சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வந்தது. தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக, குடியிருப்புப் பகுதிகளை நீர் சூழ்ந்தது. மேலும், பல இடங்களில் மரங்களும் சாலையில் விழுந்து பெரும் சேதத்துக்குள்ளாகின. பிரதான சாலைகளில் நீர் தேங்கியதால் சென்னை மாநகரமே வெள்ளக் காடாக காட்சி அளித்தது.
இந்நிலையில், தற்போது புயல் சென்னையை கடந்து ஆந்திர பகுதியில் கரையை கடந்துள்ளது. சென்னையில் மழை நின்ற நிலையில், பல இடங்களிலும் தேங்கி நின்ற மழை நீர் வடியத்துவங்கியது. மேலும், தடை செய்யப்பட்டு இருந்த மின் விநியோகமும் சீர் செய்யப்பட்டு வரும் ஒவ்வொரு பகுதியாக வழங்கப்பட்டு வருகிறது. ஆனாலும் பல இடங்களில் நீர் இன்னும் வடியாமல் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் காரப்பாக்கத்திலுள்ள அவரது வீட்டைச் சுற்றி வெள்ளநீர் சூழ்ந்துள்ளதாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு உதவி கோரி பதிவிட்டிருந்தார். இதனையடுத்து அவர் இருக்கும் காரப்பாக்கம் பகுதிக்கு விரைந்த தமிழ்நாடு தீயணைப்பு படை வீரர்கள் விஷ்ணு விஷாலை பைபர் படகு மூலம் மீட்டனர். அந்த படகில் அவரது மனைவி ஜூவாலா கட்டா மற்றும் வளர்ப்பு நாயையும் மீட்டனர். தொடர்ந்து, விஷ்ணு விஷால் மீட்கப்பட்டப் பின்பு, அவர் மீட்கப்பட்ட புகைப்படத்தையும் சமூக வலைத்தளப்பக்கத்தில் பகிர்ந்து நன்றி தெரிவித்துள்ளார்.