சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சிட்லபாக்கத்தைச் சேர்ந்த இளைஞர் சேதுராஜ் மின் கம்பம் விழுந்து உயிரிந்ததது வருத்தம் அளிக்கிறது என்றும் தெரிவித்தார்.
இந்த விபத்துக்கு மின்துறைதான் காரணம் என்ற செய்தி தவறானது; அவ்வழியாகச் சென்ற லாரி இடித்து மின் கம்பம் கீழே விழுந்ததுதான் உண்மை என்றும், அதற்கான ஆதாரம் தன்னிடம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பதிவு செய்யப்படும் புகார்களுக்கு மின்சார வாரியத்தினர் உரிய நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அந்த மின்கம்பம் பழுதடைந்ததாக எந்தப் புகாரும் கிடைக்கப்பெறவில்லை எனவும் அவர் கூறினார். காவல் துறையினர் சிசிடிவி ஆதாரங்களைத் தேடி வருவதாகவும், விரைவில் லாரி உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
அதேபோல், முகலிவாக்கம் விபத்து கூட தங்களுக்குத் தெரியாமல் வேறு யாரோ பள்ளம் தோண்டியதால் நிகழ்ந்தது என்றும், பள்ளம் தோண்டிய நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.