தேர்தல் ஆணையம், கடந்த பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை அறிவித்தது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, ஐந்து மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. தேர்தல் அறிவிப்பு வெளியானது முதல் தேர்தல் நடக்கும் மாநிலத்திலுள்ள அரசியல் கட்சிகள், தொண்டர்கள் குதூகலமாகத் தேர்தல் பணிகளைத் தொடங்கினர்.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மூன்று மாநிலங்களில், ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டமாகவும், அஸ்ஸாமில் மூன்று கட்டங்களாகவும், மேற்குவங்கத்தில் எட்டு கட்டங்களாகவும் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, நேற்று(ஏப்.6) தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மூன்று மாநிலங்களில் வாக்குப்பதிவு நடந்து முடிந்தன. மேற்குவங்கத்தில் இன்னும் ஐந்து கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளன.
தேர்தலுக்கான அறிவிப்பு, வேட்புமனு தாக்கலைத் தொடர்ந்து, ஐந்து மாநிலங்களிலும் அரசியல் கட்சிகள் தீவிரப் பரப்புரையைத் தொடங்கின. தேர்தல் களம் சூடுப்பிடிக்கத் தொடங்கியதும், வாக்காளர்களுக்கு ஓட்டுக்குப் பணம் கொடுப்பதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்ட தேர்தல் ஆணையம், கடுமையான கட்டுப்பாடுகளை விதித்ததோடு, தீவிரக் கண்காணிப்பு பணிகளையும் மேற்கொண்டது.
தமிழ்நாட்டில் பறிமுதல் செய்யப்பட்ட பொருள்கள் முறையான ஆவணங்கள் இல்லாமலும், அளவுக்கு அதிகமான பொருள்களை வாகனங்களில் கொண்டு செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பணம் கொடுப்பதும், பணம் வாங்குவதும் விதியென மாற்றப்பட்ட தேர்தல் களத்தில், இந்த முறையும் பணம் பட்டுவாடாவுக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
தனது தீவிரக் கண்காணிப்பின் வாயிலாக அவற்றை தடுத்தும் வந்தது தேர்தல் ஆணையம். தேர்தல் விதிமுறைகள் அமலில் இருந்த காலக்கட்டத்தில் முறையான ஆவணங்கள் இல்லாமல் பரிமாற்றப்பட்ட பணம், பொருள்களைத் தேர்தல் பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழு அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட பணம், பொருள்கள் எண்ணிக்கையில், மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாடு முந்தி நிற்கிறது. இந்தத் தேர்தலில் வெற்றி, தோல்வியைக் கடந்து, தங்களை தேர்தல் களத்தில் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டியத் தேவை தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இருந்தன.
தமிழ்நாட்டில் நேற்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. நேற்று பிற்பகல் வரை வரை, ஐந்து மாநிலங்களிலும் ரூ.947.98 கோடி மதிப்பிலான பணம், இலவசப் பொருட்கள், மதுபானங்கள், போதைப் பொருட்கள், உலோகங்கள் கைப்பற்றப்பட்டன. இதில், தமிழ்நாட்டில் மட்டும் ரூ.445.81 கோடி மதிப்பிலான பணம் உள்ளிட்ட பொருள்கள் கைப்பற்றப்பட்டன.
சட்டப்பேரவைத் தேர்தல் 2016, 2021 ஒப்பீடு இது, கடந்த 2016 ஆம் ஆண்டு ஐந்து மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுடன் ஒப்பிடும்போது, இத்தேர்தலில் கைப்பற்றப்பட்ட பணம் உள்பட பொருள்களின் மதிப்பு நான்கு மடங்கு அதிகமாகும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தப் பட்டியலில்படி, முதலிடத்தில் தமிழ்நாடும், அதற்கு அடுத்தபடியாக, மேற்குவங்கமும் இடம்பெற்றுள்ளன.
மேற்குவங்கத்தில் ரூ.263.15 கோடி மதிப்பிலான பணம் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டன. ஓட்டுக்குப் பணம் கொடுத்தால் வென்று விடலாம் என்ற கட்சிகளின் மனநிலையும், நாம் பணம் வாங்கவில்லை நமது உரிமையை அடகு வைக்கிறோம் என்று மக்கள் உணராதவரை இனிவரும் தேர்தல்களில், இந்த எண்ணிக்கையில் மட்டுமே மாறுபாடு இருக்கும்.