சென்னை:அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், நிறுவனங்கள், பத்திரிகையாளர்கள் என உலகம் முழுவதும் மொத்தம் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொலைபேசி எண்கள் ஒட்டுக்கேட்கப்பட்ட விவகாரம் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
பெகாசஸ் என்ற உளவுச் செயலியின் மூலம் இந்தியாவிலும் 300-க்கு மேற்பட்டோரின் தொலைபேசி ஒட்டுக்கேட்கப்பட்டதாகத் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அதில், "தொலைபேசி எண்கள் ஒட்டுக்கேட்கப்பட்ட விவகாரம், பாஜக அரசு மீதான சந்தேகத்தையும் மோசமான நடவடிக்கையையும் வெளிப்படுத்தியுள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அவரது அலுவலக ஊழியர்களின் செல்போன்களும் ஹேக்செய்யப்பட்டு, அதிலுள்ள தகவல்கள் திருடப்பட்டுள்ளன.
அமித் ஷா பதவி விலக வேண்டும்
2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது பெகாசஸ் பயன்படுத்தப்பட்டுள்ளதாக வந்துள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இஸ்ரேலைச் சேர்ந்த என்எஸ்ஓ நிறுவனம் அங்கீகரிக்கப்பட்ட அரசுகளுக்கு மட்டும் இந்த உளவு மென்பொருளை விற்பனை செய்கிறது.
எதிர்க்கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோரது செல்போன்களை ஹேக்செய்து, தரவுகளைத் திருட பாஜக அரசு பெகாசஸ் மென்பொருளை வாங்கியது தெளிவாகத் தெரிகிறது. இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்ற கண்காணிப்பின்கீழ் நீதி விசாரணை நடத்த வேண்டும்.
உள் துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 22ஆம் தேதி காலை 11 மணிக்கு காங்கிரஸ் கட்சி சார்பில், தமிழ்நாடு ஆளுநர் மாளிகையை நோக்கிப் பேரணி நடத்தப்படும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:டெலிபோன் ஒட்டுக்கேட்பு- நீதி விசாரணை கோரும் காங்கிரஸ்!