ஆளுநர் மாளிகை தேநீர் விருந்து; காங்கிரஸ் புறக்கணிப்பதாக செல்வப்பெருந்தகை பேச்சு சென்னை:தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் இன்று (ஜன.25) செய்தியாளர்களை காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவர் செல்வப்பெருந்தகை சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், குடியரசு தினத்தையொட்டி, நாளை (ஜன.26) தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் நடக்க உள்ள ஆளுநர் தேநீர் விருந்தை காங்கிரஸ் கட்சி புறக்கணிப்பதாக (TN Congress to boycott Governor Republic Day 2023 Tea party) தெரிவித்தார்.
அத்தோடு, ’தமிழ்நாட்டு மக்களின் நலனில் அக்கறை இல்லாதவர்களே ஆளுநர் விருந்து அல்ல; எந்த விருந்திலும் பங்கேற்பார்கள்’ எனவும் கூறியுள்ளார். 'காரணம் என்னவென்றால், ஆளுநர், தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராகவும், பெரும்பான்மை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி நடக்கும்போது, ஆட்சியாளருக்கு எதிராகவும் செயல்பட்டு வருகிறார்.
அரசியலமைப்புச் சட்டத்தின் படி, பொறுப்பேற்று இருக்கின்ற ஆளுநர் அரசியலமைப்புச் சட்டத்தினை மதிக்காமல் புறம் தள்ளுகிறார். ஏற்கனவே, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல மசோதாக்கள் கிடப்பில் உள்ளன. குறிப்பாக, சட்டப்பேரவையில் நீட் தேர்வு(NEET Exemption Bill), ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்(Online Gambling Prohibition Bill), பல்கலைக்கழகங்களின் சட்டம் உள்ளிட்ட பல்வேறு மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கக்கூடிய ஆளுநர் காலம் தாழ்த்தி வருகிறார். இதெல்லாம் தமிழ்நாட்டின் எதிர்காலத்தைப் பாதிக்கிறது.
11 பேர் தற்கொலை - ஆளுநரே பொறுப்பேற்க வேண்டும்:ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு மாதக்கணக்கில் தமிழ்நாடு ஆளுநர் ஒப்புதல் அளிக்காத காரணத்தால், சட்டம் இயற்றிய பிறகு 11 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த 11 பேரின் தற்கொலைக்கு ஆளுநர் பொறுப்பேற்க வேண்டும். நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்தநாளில்(Birthday of Netaji Subhash Chandra Bose), ஆளுநர் சனாதனத்தைப் பற்றியும், தமிழ்நாட்டினுடைய வரலாற்றைப் பற்றியும் பேசியிருக்கிறார்.
மக்கள் நலன் குறித்து யோசிப்பவர்கள் புறக்கணியுங்கள்: மீண்டும் மீண்டும் தமிழ்நாட்டு அரசுக்கு எதிராகவும், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுக்கு எதிராகவும் அவர் பேசி வருகிறார். இதை கண்டித்து ஆளுநர் கொடுக்கின்ற தேநீர் விருந்தை புறக்கணிக்கிறோம்' எனத் தெரிவித்தார். தமிழ்நாட்டு மக்களின் நலனில் அக்கறை இல்லாதவர்கள், ஆளுநர் விருந்து அல்ல; எந்த விருந்திலும் பங்கேற்பார்கள். தமிழ்நாட்டு மக்களின் நலன் மீது அக்கறை உள்ள தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் இதை புறக்கணிப்பார்கள். ஒருமனதாக சட்டப்பேரவையில் அதிமுக, பாஜக உட்பட ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை இயற்றி இருக்கிறோம். இந்த சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் தற்போது வரை உள்ளார்.
பாஜகவும் அதிமுகவும் நாடகம்:11 பேர் இந்த சட்டத்தை இயற்றிய பிறகு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதற்கு அதிமுகவும் பாஜகவும் உடன்படுகிறார்களா?’ என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், 'ஆளுநர் அனுமதிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை; தற்கொலை செய்தாலும் பரவாயில்லை. தமிழ்நாட்டு மக்கள் பற்றி கவலை இல்லை என்று அதிமுக மற்றும் பாஜக இருக்கிறார்களா?' என கேள்வி எழுப்பினார். 'இந்த சட்டத்தை இயற்றும்போது, இந்த சட்டத்திற்கு எதிராக அவர்கள் வாக்களிக்கவில்லை. தமிழ்நாடு மக்களின் நலனுக்காக நாங்கள் இருக்கிறோம் என்ற ஒரு நாடகத்தை பாஜக மற்றும் அதிமுகவினர் நடத்தி வருகின்றனர்.
டெபாசிட் இழப்பார்கள்:மேலும், ஆளுநர் இத்தகைய சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்று நாங்களெல்லாம், குரல் கொடுத்து வருகிறோம். ஆனால், அதிமுகவும் பாஜகவும் மௌனம் காத்து வருகின்றன. இது என்ன அரசியல் என்பது தமிழ்நாட்டு மக்கள் புரிந்து கொள்வர். கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பண மழையால்தான் வெற்றி பெற்றார்களா? என்பதை அவர்கள்தான் சொல்ல வேண்டும். ஈரோடு கிழக்கில் ஈவிகேஎஸ் இளங்கோவனை எதிர்த்து போட்டியிடும் யாராக இருந்தாலும் டெபாசிட் இழப்பார்கள்' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: திருடிய செங்கல்லை உதயநிதி திரும்ப ஒப்படைக்க வேண்டும் - ஹெச்.ராஜா