தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'ஆளுநர் பதவியில் ஆர்.என்.ரவி நீடிப்பது விரும்பத்தக்கதல்ல' - குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் கடிதம்! - ஆளுநர் மீது புகார் தெரிவித்து ஸ்டாலின் கடிதம்

இந்திய அரசியலமைப்பை உருவாக்கிய முன்னோர்களின் உணர்வையும், மாண்புகளையும் பாதுகாக்கும் வகையில், ஆளுநர் போன்ற உயர்ந்த அரசியலமைப்புப் பதவியில் ஆர்.என். ரவி நீடிப்பது விரும்பத்தக்கதாகவோ அல்லது பொருத்தமானதாகவோ உள்ளதா என்பதை இந்தியக் குடியரசுத் தலைவரின் முடிவுக்கே விட்டுவிடுவதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு 15 பக்கத்திற்கு புகார் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jul 9, 2023, 7:00 PM IST

சென்னை:தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும் எதிராக அமைந்துள்ளது குறித்தும், அரசியலமைப்புச் சட்ட மீறல்கள் குறித்தும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் குறித்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு ஜூலை 8ஆம் தேதி கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், ''தனது 10-1-2023 நாளிட்ட கடிதத்தினை 12-1-2023 அன்று புதுதில்லியில், தமிழ்நாடு அரசின் சட்ட அமைச்சர் மற்றும் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரிடம் அளித்ததை நினைவுகூர்வதாகவும், அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு மற்றும் தமிழ்நாட்டு மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பொருள் குறித்து தற்போது குடியரசுத் தலைவரின் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், மாநிலத்தின் நிர்வாக அதிகாரம் ஆளுநரிடம் உள்ளதாக இந்திய அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. இருப்பினும், பெயரளவில் மாநிலத்தின் தலைவரான ஆளுநர், தனது அதிகாரத்தை மாநில முதலமைச்சரைத் தலைவராகக் கொண்ட அமைச்சரவைக் குழுவின் ஆலோசனை மற்றும் அறிவுரைப்படியே பயன்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆளுநர் என்பவர், முக்கியமான அரசியலமைப்பு கடமைகளைச் செய்பவராகவும், பாரபட்சமற்றவராகவும், அப்பழுக்கற்ற நேர்மையான நபராகவும் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ள முதலமைச்சர் முகஸ்டாலின் , மக்களாட்சி தத்துவம் என்பது நமது அரசியல் சாசனத்தின் உயிர்நாடி என்றும், அந்த மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசை நிறுவுவதற்காகவே, நமது சுதந்திரப் போராட்ட வீரர்கள் காலனிய சக்திகளை எதிர்த்துப் போராடி, தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தனர்’’ என்றார்.

ஆளுநராக பதவி வகிக்க தகுதியற்றவர்:

மேலும், ''அரசியல் சாசனத்தின் மீதும், அது பிரதிநிதித்துவப்படுத்தும் கொள்கைகள் மீதும் ஆளுநருக்கு முழு நம்பிக்கை இருக்க வேண்டும். அரசியலமைப்பின் இலட்சியங்கள் முகவுரையில் தொகுக்கப்பட்டுள்ளன. இந்தியா ஒரு இறையாண்மை மிக்க, சோசலிச, மதச்சார்பற்ற, ஜனநாயக குடியரசு நாடு என்றும், இந்த அடிப்படைக் கொள்கைகளில் ஏதேனும் ஒன்றில் நம்பிக்கை இல்லாத ஆளுநர், அரசியலமைப்பு பதவியை வகிக்கத் தகுதியற்றவர்.

அரசியல்வாதியாக மாறும் ஒரு ஆளுநர், அப்பதவியில் தொடரவே கூடாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் கொள்கை, செயல்பாடுகள், முடிவுகளுக்கு சவால் விடும் வகையில் ஆளுநர் அரசியல் களத்தில் இறங்க வேண்டும் என்பது அரசியல் சாசனத்தின் நோக்கமல்ல. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் கொள்கைக்கு ஆளுநர் வெளிப்படையாக முரண்படுவது அல்லது சட்டமன்றம் நிறைவேற்றும் சட்டமுன்வடிவுகளுக்கு ஒப்புதல் வழங்குவதில் தேவையற்ற காலதாமதம் செய்து முட்டுக்கட்டை போடுவது அல்லது கூட்டாட்சி மற்றும் மதச்சார்பின்மை போன்ற அரசியலமைப்பின் அடிப்படை அம்சங்களுக்கு எதிராகச் செயல்படுவது போன்றதொரு சூழ்நிலையை அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் ஒருபோதும் கற்பனை செய்திருக்க மாட்டார்கள்.

அரசின் நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டை:2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், தமிழ்நாட்டை சமூகப் பொருளாதார வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல,திமுகவிற்கும், தமிழ்நாட்டு மக்கள் தங்களது உறுதியான ஆதரவை வழங்கி தேர்ந்தெடுத்துள்ளதை இந்தியக் குடியரசுத் தலைவர் நன்கு அறிவார்கள். திராவிட முன்னேற்றக் கழக அரசு பதவியேற்ற நாள் முதல் மாநிலத்தின் வளர்ச்சிக்காகவும், தமிழ்நாட்டு மக்கள் அரசின் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு ஏற்ப செயல்பட்டு வருகிறது ஆனால், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் வெளிப்படையாகத் தமிழ்நாடு அரசின் கொள்கைகளுக்கு முரணாகச் செயல்பட்டு, தமிழ்நாடு அரசும், சட்டப்பேரவையும் செய்து வரும் பணிகளுக்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறார். சட்டமுன்வடிவுகள் மற்றும் கோப்புகளுக்கு ஒப்புதல் அளிப்பதில் தேவையில்லாமல் காலதாமதம் செய்து வருகிறார்.

இதற்கு முன்பு நாகாலாந்து ஆளுநராக ஆர்.என். ரவி பொறுப்பு வகித்தபோதும் அவரது செயல்பாடுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பரவலான கண்டனத்தின் பின்னணியில்தான், ஆர்.என்.ரவி 2021-செப்டம்பரில் தமிழ்நாடு ஆளுநராக நியமிக்கப்பட்டார். அவர் பொறுப்பேற்றது முதல், சட்டபூர்வமாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக அரசுடன் கருத்தியல் மற்றும் அரசியல் போரில் ஈடுபட்டு வருகிறார். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியின் பல்வேறு நடவடிக்கைகள், அவர் ஆளுநர் பதவியை வகிக்கத் தகுதியற்றவர் என்பதைப் புலப்படுத்துவதாக உள்ளது.

சட்டமுன்வடிவுகளுக்கு ஒப்புதல் அளிப்பதில் தேவையற்ற காலதாமதம்:தமிழ்நாடு சட்டப்பேரவையும் பல முக்கியமான சட்டமுன்வடிவுகளை இயற்றி அவற்றை ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டமுன்வடிவுகளுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் தேவையற்ற காலதாமதம் ஏற்படுத்தி வருவது வேதனை அளிக்கிறது. ஆளுநரின் இத்தகைய செயல், ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கம் மக்களுக்குச் சேவை செய்வதைத் தடுக்கிறது, இது அரசியலமைப்பிற்கு முரணானது.

நமது அரசியலமைப்புச் சட்டத்தின்படி, அமைச்சரவை அல்லது சட்டப்பேரவையின் முடிவின் மீது, ஒரு ஆளுநர் மேல்முறையீட்டு அதிகாரியாக இருக்க முடியாது, சட்டமுன்வடிவின் நோக்கக் காரணம், தேவை மற்றும் சட்டமுன்வடிவின் அவசியம் குறித்து ஆளுநர் விசாரிக்க முடியாது. இது சட்டமுன்வடிவின் அவசியத்தை விரிவாக விவாதிக்கும் சட்டப்பேரவையின் முழு உரிமைக்கு உட்பட்டது. இந்தச் சூழ்நிலையில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட சட்டமுன்வடிவுகள் தொடர்பாக ஆளுநர் கோரிய அனைத்து விளக்கங்களையும் தமிழ்நாடு அரசு அளித்துள்ளது .

சட்டப்பேரவையில் சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டவுடன் அது மக்களின் விருப்பமாகக் கருதப்பட்டு, ஆளுநர் அரசியலமைப்பின் கட்டமைப்பிற்குள் செயல்பட வேண்டும். சட்டமுன் வடிவுகளுக்கு ஒப்புதல் அளிப்பதற்கு காலக்கெடு வகுக்கப்படவில்லை என்பதை ஆளுநர் தவறாகப் பயன்படுத்தக் கூடாது . இப்படிப்பட்ட உயர் பதவிகளில் இதுபோன்ற செயல்கள் நடக்கும் என்று அரசியல் சாசனத்தை உருவாக்கியவர்கள் நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டார்கள்.

தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் அரசியல் மற்றும் கருத்தியல் எதிராளியாக செயல்படுதல்:ஆர்.என்.ரவி தனிப்பட்ட முறையில், தனது அரசியல் மற்றும் மதக் கருத்துகளைத் தொடர்ந்து பொது வெளியில் தெரிவித்து வருவது, அவர் வகிக்கும் ஆளுநர் பதவிக்கு மிகவும் பொருத்தமற்றது . ஒரு மாநில ஆளுநராக, அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கு சங்கடத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், சட்டப்படி நிறுவப்பட்ட அரசாங்கத்தின் மீது அவமதிப்பு, வெறுப்பு, அதிருப்தி மற்றும் தவறான எண்ணத்தைத் தூண்ட முயல்கிறார்.

அமைதியாகவும், நல்லிணக்கத்துடனும் வாழும் பல்வேறு மதங்கள், மொழிகள், இனங்களைச் சேர்ந்தவர்களுக்கு தமிழ்நாடு சொர்க்கம் போன்றது என்றும், மதச்சார்பற்ற கொள்கைகள் மற்றும் பாலின சமத்துவம் ஆகியவற்றில் மாநில அரசு தனது முழு நம்பிக்கையை கொண்டுள்ளது. கெடுவாய்ப்பாக, ஆர்.என். ரவி , இந்த நாட்டின் மதச்சார்பற்ற கொள்கைகளில் தனக்கு நம்பிக்கை இல்லை என்பதை அடிக்கடி தனது பிளவுபடுத்தும் பேச்சுகளின் மூலம் பகிரங்கமாக வெளிப்படுத்தி வருகிறார்.

இந்தியா, அதன் அரசியலமைப்பு மற்றும் சட்டங்களைச் சார்ந்துள்ளதையும், எந்த மதத்தையும் சார்ந்ததல்ல. இந்தியாவின் வலிமையும், அழகும், அதன் பன்முக கலாச்சாரங்களைக் கொண்ட சமூகத்திலும், பல நூற்றாண்டுகளாக கட்டமைக்கப்பட்ட மத நல்லிணக்கத்திலும் உள்ளது. தமிழ்நாட்டு மக்களுக்கு எது நல்லது என்பதை முடிவு செய்ய ஆர்.என். ரவி தமிழ்நாட்டில் எந்தத் தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெறவில்லை.

அவர் மக்களின் தலைவர் அல்ல; நியமனம் செய்யப்பட்ட ஒரு நிர்வாகி. காசி தமிழ் சங்கமம் என்ற விழாவில், மீண்டும் தமிழ் மக்களையும், பண்பாட்டையும், இலக்கியத்தையும், திராவிடக் கருத்தியலையும், அரசியலையும் இழிவுபடுத்தும் வகையிலும், அவதூறாகவும் அறிக்கைகளை வெளியிட்டுள்ளார். திராவிட அரசியல் பிற்போக்குத்தனமானது என்று ஆர்.என். ரவி கூறியிருப்பது அவதூறானது மட்டுமல்ல; அது அறியாமையில் தெரிவிக்கப்பட்டுள்ளதுமாகும். எனவே, தமிழ்நாட்டில் திராவிட அரசியல் பிற்போக்குத்தனமானது என்று சொல்பவர்களின் பார்வையில்தான் குறைபாடு இருக்கிறது. ஆளுநர் என்ற அரசியலமைப்புப் பதவியை வகிக்கும் ஒரு நபரின் பொருத்தமற்ற அரசியல் போக்கையே இது அம்பலப்படுத்துகிறது.

அரசியல் சாசனத்தின் அடிப்படைக் கட்டமைப்பின் முக்கிய அங்கமான கூட்டாட்சித் தத்துவம், நிர்வாக நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டது என ஆளுநர் ஆர்.என். ரவி விமர்சித்து, அவதூறாகப் பேசியிருப்பதுதான் அதைவிட அதிர்ச்சியளிக்கும் விஷயம். கூட்டாட்சி என்பது நிர்வாக நோக்கங்களுக்காக உருவாக்கப்படவில்லை; மாறாக அரசியலமைப்பின்கீழ் இந்தியா இவ்வாறாக அமைக்கப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 1-இல் இந்தியாவை "மாநிலங்களின் ஒன்றியம்" என்று வரையறுக்கிறது; இதன் மூலம் மாநிலங்கள் ஒன்றிணைந்து ஒன்றியத்தை உருவாக்குகின்றன.

பொதுவெளியில் அவர் தெரிவிக்கும் கருத்துகள் அவர் வகிக்கும் பதவிக்கு ஏற்றதாக இல்லை. எடுத்துக்காட்டாக, தமிழ்நாட்டை மேம்படுத்தவும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக முதலீடுகளை ஈர்க்கவும் கிழக்காசிய நாடுகளுக்கு தான் மாநிலத்திற்கு மிகுந்த பயனளிக்கக்கூடிய பயணம் மேற்கொண்டிருந்தபோது, ஆளுநர் ஆர்.என்.ரவி , வெளிநாட்டுப் பயணங்களால் முதலீடுகள் வருவதில்லை என்று சீண்டுவதுபோல குறிப்பிட்டதைச் சுட்டிக்காட்டியுள்ளாார். ஆர்.என்.ரவி அரசியலமைப்புச் சட்டத்தால் நியமிக்கப்பட்ட கண்ணியமான ஆளுநராகச் செயல்படுவதை விட, மலிவான அரசியலில் அதிக ஆர்வம் கொண்டவர்.

ஆளுநர் அலுவலகம் என்பது அரசியல் சார்பற்றதாகவும், ஆளுநர் தனது செயல்பாட்டிலும், பார்வையிலும், உண்மையாகவும் மதச்சார்பற்றவராக இருக்க வேண்டும். ஒரு நல்ல ஆளுநர் தன்னைப் பற்றிய ஒரு உயர்வான கருத்தை அரசாங்கத்திற்குள்ளும், மாநில மக்கள் மத்தியிலும் உருவாக்க உதவ வேண்டும். அவர் மாநில மக்கள் மீதும், திறமையான நிர்வாகத்தின் மீதும் அக்கறை கொண்டவராக இருக்க வேண்டுமென்றும் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் , ஏதோ ஒரு கட்சி அல்லது கருத்தியலின் நலனை வளர்ப்பதற்காக ஆளுநர் செயல்படக் கூடாது. அவர் மாநிலத்தின் நலனுக்காகத் தனது அரசியலமைப்புக் கடமைகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தி, அரசியலமைப்புக் குறிக்கோள்கள் மற்றும் நெறிமுறைகளுக்கு ஏற்ப செயல்பட வேண்டும்.

மாநில அரசை கவிழ்க்கும் வாய்ப்பைத் தேடும் ஆளுநர்:ஒன்றிய ஆளும் கட்சியை எதிர்க்கும் ஒரு கட்சியின் கைகளில் மாநில ஆட்சி இருக்கும்போது, மாநிலத் தலைநகர்களில் அமர்ந்துகொண்டு, அந்த மாநில அரசை கவிழ்க்கும் வாய்ப்பைத் தேடும் ஆளுநரை வெறும் ஒன்றியத்தின் முகவராகத்தான் கருதமுடியும் என்றும், ஆளுநரின் இத்தகைய செயல் நமது கூட்டாட்சித் தத்துவத்தை சிதைத்து, இழிவுபடுத்தி, இந்திய ஜனநாயகத்தின் அடிப்படைத் தத்துவங்களையே அழித்துவிடும் என்று சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

அரசியல் சாசனத்தையும், சட்டத்தையும் பாதுகாப்பதற்கும், தமிழ்நாட்டு மக்களின் சேவைக்கும், நல்வாழ்விற்கும் தன்னை அர்ப்பணித்துக் கொள்வதற்கும், 159-ஆவது பிரிவின்கீழ் எடுத்த உறுதிமொழியை ஆளுநர் ஆர்.என். ரவி மீறியுள்ளார் என்பது தெளிவாகிறது. அவர் வகுப்புவாத வெறுப்பைத் தூண்டிவிட்டு, மாநிலத்தின் அமைதிக்கு அச்சுறுத்தலாக இருக்கிறார். அதுமட்டுமல்லாமல், அதிமுக முன்னாள் அமைச்சர்கள்மீது வழக்கு தொடர சிபிஐ வேண்டுகோள் விடுத்தும், அதற்கு அனுமதி தராமல் காலம் தாழ்த்திவரும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி , மறுபுறம் தனது அமைச்சர் ஒருவர் மீது வழக்கு விசாரணை தற்போதுதான் தொடங்கியுள்ள நிலையில், அவரை "டிஸ்மிஸ்" செய்ய அவசர கதியில் செயல்படுவதன் மூலம் தனது அரசியல் சார்புகளை வெளிப்படுத்தியுள்ளார்.

ஆர்.என். ரவி அவர்கள், தனது நடத்தை மற்றும் செயல்பாடுகள்மூலம், தான் ஒருதலைப்பட்சமானவர் மற்றும் ஆளுநர் பதவியை வகிக்க தகுதியற்றவர் என்பதை நிரூபித்துள்ளார் . அவர் உயர் பதவியில் இருந்து நீக்கப்படுவதற்கு தகுதியானவர் .அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 156(1)ல், குடியரசுத் தலைவர் விரும்பும் காலம்வரை ஆளுநர் பதவியில் இருப்பார் என்று இருப்பதாகவும், தமிழ்நாட்டு மக்களின் நலன் கருதியும், தமிழ்நாடு அரசின் நலன் கருதியும் மேற்குறிப்பிட்டுள்ள அனைத்து உண்மைகளையும் இந்தியக் குடியரசுத் தலைவரின் கனிவான பார்வைக்கு வைக்க விரும்புகிறேன்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நமது இந்திய அரசியலமைப்பை உருவாக்கிய முன்னோர்களின் உணர்வையும், மாண்புகளையும் பாதுகாக்கும் வகையில், ஆளுநர் போன்ற உயர்ந்த அரசியலமைப்புப் பதவியில் ஆர்.என். ரவி நீடிப்பது விரும்பத்தக்கதாகவோ அல்லது பொருத்தமானதாகவோ உள்ளதா என்பதை இந்தியக் குடியரசுத் தலைவரின் முடிவுக்கே விட்டுவிடுவதாகவும் அதில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்து விட்டது - அண்ணாமலை விமர்சனம்

ABOUT THE AUTHOR

...view details