பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவை நேற்று (ஜூலை 7) விரிவாக்கம் செய்யப்பட்டது. அதில் புதிதாக 43 பேர் இடம்பெற்றுள்ளனர்.
குடியரசுத்தலைவர் மாளிகையில் நேற்று (ஜூலை 7) மாலை 6 மணியளவில் நடைபெற்ற விழாவில் குடியரசுத்தலைவர் ராம் நாத் கோவிந்த், 43 பேருக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இந்நிகழ்வில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, மக்களவைத்தலைவர் ஓம் பிர்லா ஆகியோர் பங்கேற்றனர். புதிய ஒன்றிய அமைச்சரவையில் 15 பேர் ஒன்றிய அமைச்சர்களாகவும், 28 பேர் ஒன்றிய இணை அமைச்சர்களாகவும் பதவியேற்றுக்கொண்டனர்.
தமிழருக்கு வாய்ப்பு
இந்த புதிய அமைச்சரவையில் தமிழ்நாட்டைச் சார்ந்த பாஜக மாநிலத்தலைவர் எல். முருகன் இடம்பெற்றுள்ளர். அவருக்கு தகவல், ஒலிபரப்புத்துறை, மீன்வளம், கால்நடைத்துறை மற்றும் பால்வளத்துறை ஆகியத்துறைகளின் இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.