சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று (டிச. 2) காலை முதல் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருப்பெற்றது. இந்நிலையில், இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வருகிற டிசம்பர் 5ஆம் தேதி அன்று ஆந்திரா கடற்கரை ஒட்டிய நெல்லூருக்கும் மசூலிபட்டினத்திற்கும் இடையே தீவிர புயலாகக் கடக்க உள்ளது.
இதனால் சென்னை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் லேசான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது. மேலும், இரு நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. முன்னதாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்கள், சட்டமன்ற-நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் உள்ளிட்ட கழக அமைப்புகளில் உள்ள அனைத்து நிர்வாகிகளும் தங்களது பகுதியில் உள்ள மக்களின் அத்தியாவசியத் தேவைகளுக்கு உதவிட வேண்டும் எனவும், நிவாரணப் பணிகளில் ஈடுபடும் அரசு அதிகாரிகளுக்கு துணைநிற்க வேண்டும் என உத்தரவிட்டார்.
மேலும், மழையினால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க அவரச கால உதவி எண்கள் மற்றும் முகாம்கள் அமைக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மாவட்ட ஆட்சியர்கள், இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலசந்திரன் உள்ளிட்டோரை காணொலி வாயிலாக தொடர்பு கொண்டு கனமழை மற்றும் மிக்ஜாம் புயலை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.
அதன்பின், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழிலகத்தில் அமைந்துள்ள மாநில பேரிடர் அவசரக் கட்டுபாட்டு மையத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், "தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் மாற்றுவதற்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தபட்டுள்ளது. பொதுமக்களுக்கு எச்சரிக்கை குறுஞ்செய்தியும் கை பேசிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.