தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் ரூ.1000 கோடி நிலம் மீட்பு; 33 ஆண்டு சட்டப்போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் - சென்னை உயர்நீதிமன்றம்

சென்னையின் முக்கியப் பகுதியில் அரசுக்குச் சொந்தமான 115 கிரவுண்ட் நிலத்தை நீண்டகாலச் சட்டப் போராட்டத்துக்குப் பிறகு ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து தமிழ்நாடு அரசு கைப்பற்றியுள்ளது 33 ஆண்டு சட்டப்போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என முதல்வர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
கோப்புப்படம்

By

Published : Jun 7, 2023, 5:03 PM IST

Updated : Jun 7, 2023, 5:20 PM IST

சென்னை: இது தொடர்பாக தமிழ்நாடு அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "சென்னையின் முக்கியப் பகுதியில் அரசுக்குச் சொந்தமான 115 கிரவுண்ட் நிலத்தை நீண்டகாலச் சட்டப் போராட்டத்துக்குப் பிறகு ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து தமிழ்நாடு அரசு கைப்பற்றியுள்ளது. இந்நிலத்தின் இன்றைய மதிப்பு சுமார் ரூ. 1,000 கோடியாகும்.

சென்னை அண்ணா மேம்பாலம் அருகே கதீட்ரல் சாலையின் இருபகுதிகளிலும் தோட்டக்கலைத் துறைக்குச் சொந்தமான நிலங்கள் உள்ளன. பிரிட்டிஷார் தங்களது வீடுகளில் தோட்டம் அமைத்துப் பராமரித்தனர். அதற்கான செடி, நாற்றுகளை உருவாக்கத் தொடங்கப்பட்டது தான் மெட்ராஸ் வேளாண் தோட்டக்கலைச் சங்கம். இச்சங்கத்திற்கு அரசால் அளிக்கப்பட்டு வந்த குத்தகை அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வந்தது.

1964, 1980ஆம் ஆண்டுகளில் இந்த நிலத்தைத் திரும்பப் பெற அரசால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. நிலத்தின் மீதான அரசின் உரிமையை வேளாண் தோட்டக்கலைச் சங்கம் நிபந்தனையின்றி ஏற்றுக்கொண்ட நிலையில் 1980ஆம் ஆண்டில் இந்த நிலம் மீண்டும் அச்சங்கத்திற்கு வழங்கப்பட்டது.

அந்நிலம் தனிநபர்களின் லாப நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்பட்டதால் 1989ஆம் ஆண்டில் அந்நிலத்தை அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவர அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி முயற்சிகள் மேற்கொண்டார்.அதற்கெதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 1998ஆம் ஆண்டு ஜூன் 19 அன்று பிறப்பித்த உத்தரவில், நிலத்தைத் திரும்ப எடுத்துக்கொண்ட திமுக அரசின் ஆணையை ரத்துசெய்தது.2001இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தது.

தி.மு.க. ஆட்சியில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல் முறையீட்டில் இறுதித் தீர்ப்பு வழங்கப்படாமல் வழக்கு நிலுவையில் இருந்தது.உயர்நீதிமன்றத்தில் மீண்டும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்து வழக்கைத் தொடர 2006 திமுக ஆட்சியில் முடிவுசெய்யப்பட்டது. இதை எதிர்த்து, தோட்டக்கலைச் சங்கம், உச்ச நீதிமன்றத்தில் பதிவு செய்த வழக்கு, 2007இல் தள்ளுபடி செய்யப்பட்டது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்களின் மீதான வழக்கில், உயர்நீதிமன்றம் 2008இல் வழங்கிய தீர்ப்பில்; திமுக அரசு செய்த மேல் முறையீட்டு மனுக்களை அனுமதித்தும்; நிலத்தை அரசு திரும்ப எடுத்துக் கொள்ள பிறப்பித்த திமுக அரசின் ஆணையை ரத்து செய்து தனி நீதிபதி 1998இல் வழங்கிய தீர்ப்பை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றத்தில் தோட்டக்கலைச் சங்கம் தாக்கல் செய்த மேல் முறையீட்டின் இடைக்கால ஆணையில் தோட்டக்கலை மேம்பாட்டுக்காக மீட்கப்பட்ட நிலத்தை அரசு பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டது.அதன்படி பொதுமக்கள் பயன்பாட்டுக்காக செம்மொழிப் பூங்கா தொடங்கப்பட்டது.

இதற்கிடையே ஆகஸ்ட் 22, 2011 அன்று சென்னை மாவட்ட ஆட்சியர் செம்மொழிப் பூங்காவுக்கு எதிரில் இருந்த நிலத்தைத் தோட்டக்கலைச் சங்கம் தொடர்ந்து பயன்படுத்தி வரும் வகையில் உத்தரவு பிறப்பித்தார். ஆட்சியரின் அந்த உத்தரவை ஏன் ரத்து செய்யக் கூடாது என்று நவம்பர் 1, 2011 அன்று நில நிர்வாக ஆணையரால் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. நில நிர்வாக ஆணையரின் இந்த நடவடிக்கையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்த வழக்கை நவம்பர் 25, 2022 அன்று தனி நீதிபதி அமர்வு தள்ளுபடி செய்தது.

தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து வேளாண் தோட்டக்கலை சங்கம் தாக்கல் செய்திருந்த மேல் முறையீட்டை மார்ச் 6 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு தள்ளுபடி செய்துள்ளது. மேல் முறையீட்டாளருக்கு உரிய வாய்ப்பளித்த பிறகு நில நிர்வாக ஆணையர் சட்டப்படியான நடவடிக்கையை மேற்கொள்ளவும் அனுமதி அளித்தது. இதை அடுத்து, வருவாய்த் துறை அலுவலர்கள் ஆக்கிரமிப்பிலிருந்த நிலத்தைப் பூட்டி சீல் வைத்துள்ளனர்.

மாநகரின் முக்கியப் பகுதியில் அமைந்துள்ள அரசுக்குச் சொந்தமான நிலத்தைத் தனியாரிடமிருந்து மீட்க தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் தொடர் சட்ட முயற்சிகளுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும் இது.இந்த வழக்கில் மாவட்ட ஆட்சியர் மற்றும் நில நிர்வாக ஆணையர் ஆகியோர் தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ. ரவீந்திரன் ஆஜரானார்.

வழக்கில் மேலும் ஒரு தரப்பினராக இணைத்துக்கொண்ட ஒய். புவனேஷ்குமாருக்காக மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜரானார் என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கில் கிடைத்த வெற்றியை அடுத்து நில நிர்வாக ஆணையர், கூடுதல் தலைமைச் செயலாளர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மற்றும் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் ஆகியோருக்கு முதல்வர் தன்னுடைய பாராட்டினையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்." இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மாஜி அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு புதிய சிக்கல்.. டெண்டர் முறைகேடு புகாரில் நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் அனுமதி!

Last Updated : Jun 7, 2023, 5:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details