சென்னை:தமிழ்நாட்டை 2030ஆம் ஆண்டிற்குள் ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக உயர்த்தும் நோக்கில் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024-ஐ சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று துவங்கி வைத்தார்.
இதில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அமைச்சர் பியூஷ் கோயலுக்கு ஜல்லிக்கட்டு காளை நினைவுப் பரிசை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். இந்த முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் ரூ.5.50 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகளை ஈர்க்க திட்டமிடப்பட்டு உள்ளது. இன்று (ஜன. 07) துவங்கியுள்ள இந்த மாநாடு, நாளையும் (ஜன. 08) நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டில் 45 நாடுகளுக்கும் மேற்பட்ட பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். இதில் குவால்காம் நிறுவனத்தின் ரூ.177.27 கோடி மதிப்பிலான சிப் வடிவமைப்பு மையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார், ஃபர்ஸ்ட் சோலார், எல்ஜிபிடிக்யூ மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீதம் வேலைவாய்ப்பு உறுதி அளித்துள்ள கோத்ரேஜ் நிறுவனத்தின் ரூ.515 கோடி முதலீட்டிலான கன்ஸ்யூமர் புராடக்ட் ஆகியவற்றிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.