செங்கல்பட்டு மாவட்டம், பையனூரில் 103.07 ஏக்கர் பரப்பளவில் சாயி பல்கலைக்கழகம் புதிதாக நிறுவப்படவுள்ளது. இந்நிலையில் இங்கு முதற்கட்டமாக நிறுவப்படவுள்ள சுமார் 600 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பிரதான வளாகக் கட்டடத்திற்கு, காணொலிக் காட்சி மூலமாக முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
சென்னையில் கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி 23 மற்றும் 24ஆம் தேதிகளில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது, சாயி பல்கலைக்கழகம் நிறுவுவது தொடர்பாக தமிழ்நாடு அரசின் உயர்கல்வித் துறைக்கும், சாயி கல்வி, மருத்துவம், ஆராய்ச்சி மற்றும் அறக்கட்டளை நிறுவனத்திற்கும் இடையே கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
சாயி பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் குழுவில் உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி, மூத்த வழக்கறிஞர், கல்வி மற்றும் பிற துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.