சென்னை:இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டு மீனவர்களை உடனடியாக விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுத்திட வலியுறுத்தி, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது, "தமிழ்நாட்டைச் சேர்ந்த 17 மீனவர்கள் 3 விசைப்படகுகளில் (பதிவு எண்கள் IND-TN-10-MM-407, IND-TN-08-MM-214 and IND-TN-16-MM-2046) மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில், சர்வதேசக் கடல் எல்லையைத் தாண்டி இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்ததாகக் கூறி, இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் இதுபோன்று கைது செய்யப்படுவது தொடர்கதையாகி வருவதாகவும், இது தமிழ்நாட்டு மீனவர்களிடையே அச்சத்தையும், நிச்சயமற்ற சூழலையும் ஏற்படுத்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மீன்பிடித் தொழிலை மட்டுமே வாழ்வாதாரமாக கொண்டுள்ள இந்த மீனவர்ககளின் படகுகள் கடலுக்குள் தெளிவான எல்லை நிர்ணயம் மற்றும் எல்லை தொடர்பான வரையறைகள் ஏதும் இல்லாததால், சில நேரங்களில் தற்செயலாக இலங்கைக் கடற்பரப்பிற்குள் சென்று விடுகிறது.