சென்னை: தமிழ்நாடு அரசின் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் ஓர் அறிக்கையை சமர்பித்தார். அப்போது அவர் பேசியதாவது, “பேரவைத் தலைவரின் அனுமதியோடு 110 விதியின் கீழ் ஓர் அறிக்கையை அவையில் எடுத்து வைக்க விரும்புகிறேன்.
தமிழ்நாட்டில் உள்ள வணிகர் பெருமக்கள் மற்றும் நிறுவனங்களுக்கும், வணிகவரித் துறைக்கும் இடையே உள்ள வரி நிலுவை மற்றும் மேல்முறையீடுகள் குறித்த பிரச்னைகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒரு நல்ல வாய்ப்பாகவும், சிறு வணிகர்களின் நலன் காத்திடுவதற்கான ஒரு முன்னோடி நடவடிக்கையாகவும், இந்த அரசு செயல்படுத்த உள்ள 'புதிய வரி நிலுவைத் தொகை சமாதானத் திட்டம்' பற்றிய அறிவிப்பை 110 விதியின் கீழ் வெளியிடுகிறேன்.
தமிழ்நாடு அரசுக்கு வணிகர்கள் செலுத்த வேண்டிய வரி நிலுவைத் தொகை தொடர்பாக 2 லட்சத்து 11 ஆயிரத்து 607 கேட்பு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவற்றில் சம்பந்தப்பட்ட வணிகர்கள் மற்றும் வணிக நிறுவனங்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 569. இவற்றில் நிலுவையாக உள்ள தொகை 25 ஆயிரம் கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டு உள்ளது.
இவ்வாறு மிக அதிக எண்ணிக்கையில் வழக்குகள் நிலுவையில் உள்ளதால், வணிகவரித் துறையின் பணிச்சுமை அதிகரிப்பதோடு, நமது வணிகர்களும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். தமிழ்நாடு அரசுக்கு வர வேண்டிய வருவாயும் பெருமளவில் நிலுவையாக உள்ளது.
இவற்றில் பெரும்பான்மையான வழக்குகள் தமிழ்நாடு வணிக வரிச் சட்டம் மற்றும் தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரிச் சட்டம் ஆகியவற்றின் கீழ் நிலுவையில் உள்ள வழக்குகள். மேற்கூறிய இரு முக்கிய சட்டங்கள் மற்றும் பல இதர சட்டங்களையும் உள்ளடக்கி கடந்த 1.7.2017 முதல் நாடு முழுமைக்கும் ஜி.எஸ்.டி (GST) சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, தற்போது நடைமுறையில் இருந்து வருகிறது.
ஏற்கனவே வழக்கத்திலிருந்த மேற்கூறிய வரிச்சட்டங்களின் கீழ் அரசுக்கு செலுத்தப்பட வேண்டிய வரி, அதன் மீதான வட்டி மற்றும் அபராதம் ஆகியன இன்னமும் பல வணிகர்களின் பெயரில் நிலுவையில் இருந்து வருகின்றன. இந்த நிலுவைத் தொகையை திருப்பி செலுத்துவதில் சலுகைகள் வழங்கப்பட்டு, இந்தப் பிரச்னைகளுக்கு முடிவு காணப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வணிகர்கள் நீண்ட நாட்களாக முன்வைத்து வருகிறார்கள்.
இந்தக் கோரிக்கைகளை கவனமுடன் பரிசீலித்து, இத்தகைய பழைய நிலுவைத் தொகைகளை வசூலிப்பதில் ஒரு சமாதானத் திட்டத்தை அறிவித்துச் செயல்படுத்திட இந்த அரசு முடிவு செய்து உள்ளது. கடந்த ஆண்டுகளில் இந்த நிலுவைத் தொகைகள் குறித்து பல சமாதானத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு இருந்தாலும், புதியதோர் அணுகுமுறையோடும், கூடுதல் சலுகைகளோடும் இந்தத் திட்டம் இப்போது வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், வரி மதிப்பீட்டு ஆண்டில், ரூபாய் ஐம்பதாயிரத்திற்கு குறைவாக வரி, வட்டி, அபராதத் தொகை செலுத்த வேண்டிய வணிகர்களுக்கு இந்நிலுவைத் தொகையானது முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படும். ஒவ்வொரு வரி மதிப்பீட்டு ஆண்டிலும் ரூபாய் ஐம்பதாயிரத்திற்கு உட்பட்ட நிலுவை இனங்களுக்கு வரி செலுத்துவதிலிருந்து முழு விலக்கு அளிக்கப்படும்.