சென்னை:கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக எடப்பாடி பழனிசாமியின் முன்னாள் தனி பாதுகாப்பு அதிகாரியிடம், இன்று(ஏப்.20) காலை சுமார் 4 மணி நேரம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அவரிடமிருந்து முக்கிய ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவையில் இன்று காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டில் கொலை, கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக குற்றம்சாட்டினார்.
அப்போது பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், "பொள்ளாச்சி வழக்கில் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? கோடநாடு சம்பவம் என்ன ஆயிற்று? தற்போது நாங்கள்தான் நடவடிக்கை எடுத்து வருகிறோம்" என்றார்.
அதற்கு ஈபிஎஸ், "கோடநாடு வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடித்தது, அதிமுக அரசுதான். அவர்களுக்கு ஜாமீன் வழங்கியது திமுக. கோடநாடு வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என நீதிமன்றத்தை நாட உள்ளோம்" என்றார்.
அதற்குப் பதிலளித்த முதலமைச்சர், "கோடநாடு விவகாரத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அதிமுக ஆட்சியில் மெத்தனமாக இருந்தீர்கள். நாங்கள் அந்த வழக்கு குறித்து முறையாக விசாரணை நடத்தி குற்றம் புரிந்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம்" என்று கூறினார்.
அதற்கு ஈபிஎஸ், ''கோடநாடு வழக்கு விசாரணைக்கு வந்தபோது கரோனா காலகட்டம்; அதனால் முறையாக விசாரணை நடத்த முடியவில்லை'' என்று கூறினார். அப்போது குறுக்கிட்ட சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ''கோடநாடு வழக்கில் குற்றவாளிகள் தப்ப முடியாதபடி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று உறுதி அளித்தார்.