தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தென்மாவட்டங்களில் நதி நீர் இணைக்கும் திட்டத்தின் சோதனையை மேற்கொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு..!

Water linking project test: தென்மாவட்டங்களில் உள்ள தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு ஆகிய நதிகளின் நீரை இணைக்கும் திட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் உபரிநீரைத் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களின் வறண்ட பகுதிகளுக்குக் கொண்டு செல்வதற்கான சோதனை ஓட்டத்தை மேற்கொள்ளத் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

water linking project of the rivers
தென்மாவட்டங்களில் நதி நீர் இணைக்கும் திட்டத்தின் சோதனையை மேற்கொள்ள முதல்வர் உத்தரவு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 17, 2023, 8:22 PM IST

சென்னை: தென்மாவட்டங்களில் உள்ள அணைகள் நிரம்பி வருவதை ஒட்டி தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு ஆகிய நதிகளின் நீரை இணைக்கும் திட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் உபரிநீரைத் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களின் வறண்ட பகுதிகளுக்குக் கொண்டு செல்வதற்கான சோதனை ஓட்டத்தை மேற்கொள்ளத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில், "கடந்த மார்ச் 2008ஆம் ஆண்டில் நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி அறிவித்தபடி, தாமிரபரணி ஆற்றிலிருந்து கடலில் உபரியாகக் கலக்கும் 13,758 மில்லியன் கன அடி வெள்ளநீரில், கன்னடியன் (தாமிரபரணியின் 3-வது) அணைக்கட்டிலிருந்து 2765 மில்லியன் கன அடி நீரை கருமேனியாறு மற்றும் நம்பியாறு நதிகளுடன் இணைக்கும் திட்டத்திற்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டது.

இந்த திட்டத்தை நான்கு நிலைகளாகச் செயல்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டு, அன்றைய முதலமைச்சர் கருணாநிதியால் 21.02.2009 அன்று இந்த திட்டத்தின் பணிகள் துவக்கி வைக்கப்பட்டன. கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த பணிகள் விரைவுபடுத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டன. தற்போது, முதல் மூன்று நிலைகளுக்கான பணிகளும் முழுமையாக முடிக்கப்பட்டு நான்காவது நிலை பணிகளும் முடியும் தருவாயில் உள்ளன.

திருநெல்வேலி மாவட்டத்தில் 67.1 கி.மீ நீளத்திற்கும் தூத்துக்குடி மாவட்டத்தில் 8.10 கி.மீ நீளத்திற்கும் என மொத்தமாக 75.2 கி.மீ நீளத்திற்கு வெள்ளநீர்க் கால்வாய்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த திட்டத்தினால் 17,002 ஹெக்டேர் புதிய பாசனப் பரப்பு உட்பட 23,040 ஹெக்டேர் நிலங்கள் பாசன உறுதி பெறும்.

திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டை, நாங்குநேரி, இராதாபுரம் ஆகிய 3 சட்டமன்றத் தொகுதிகளும் தூத்துக்குடி மாவட்டத்தில் திருவைகுண்டம், திருச்செந்தூர் ஆகிய 2 சட்டமன்றத் தொகுதிகளும் பயன்பெறும். திருநெல்வேலி மாவட்டத்தில் 32 கிராமங்கள் மற்றும் 177 குளங்களும் தூத்துக்குடி மாவட்டத்தில் 18 கிராமங்கள் மற்றும் 75 குளங்களும் பயன்பெறும்.

தற்போது வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்து, தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, இந்த திட்டத்தில் உபரிநீரைக் கொண்டு செல்வது குறித்து, நீர்வளத்துறை அமைச்சரிடமும் நீர்வளத்துறை அலுவலர்களுடனும், தமிழ்நாடு முதலமைச்சர் கலந்தாலோசித்தார்.

இந்த ஆலோசனையின் போது எடுக்கப்பட்ட முடிவின்படி, கன்னடியன் வெள்ளப்பெருக்கு கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டு சோதனை ஓட்டம் மேற்கொள்ள முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். இத்திட்டம் செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதன் மூலம், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள வறண்ட பகுதிகளில் வாழும் விவசாயிகள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:தமிழ்நாடு ஆளுநரும், முதலமைச்சரும் கோவைக்கு ஒரே விமானத்தில் நாளை (டிச.18) பயணம்..!

ABOUT THE AUTHOR

...view details