தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

TN budget 2023: அரசு வழங்கும் மானியங்களுக்காக மின்சாரத்துறைக்கு ரூ.14,063 கோடி ஒதுக்கீடு - புனல் மின் திட்டம்

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு அரசால் வழங்கப்படும் மானியங்களுக்காக ரூ.14,063 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Mar 20, 2023, 3:45 PM IST

சென்னை: தமிழ்நாட்டின் 2023-2024க்கான நிதிநிலை பட்ஜெட் அறிக்கையை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று(மார்ச் 20) சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அதில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு அரசால் வழங்கப்படும் மானியங்களுக்காக ரூ.14,063 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்த பட்ஜெட் அறிக்கையில், "மாநிலத்தில் அதிகரித்து வரும் மின் தேவையை நிறைவு செய்திட பசுமை ஆற்றல் வளங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து, 2030ஆம் ஆண்டிற்குள் 33,000 மெகாவாட் அளவிற்கு மாநிலத்தின் உற்பத்தித் திறனை உயர்த்தி மாநிலத்தில் மின் உற்பத்தியினை இரட்டிப்பாக்க அரசு முடிவு செய்துள்ளது.

மாநில மின் உற்பத்தியில் தற்போது 20.88 சதவீதமாக இருக்கும் பசுமை ஆற்றலின் பங்களிப்பை 2030ஆம் ஆண்டிற்குள் 50 சதவீதமாக அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. சூரிய ஆற்றல் திறன் 20 ஜிகா வாட், நிலப்பரப்பில் காற்றாலைகள் திறன் 70 ஜிகா வாட், கடல் பரப்பில் காற்றாலைகள் திறன் 30 ஜிகா வாட் என மிகுதியான பசுமை ஆற்றல் வளங்களையும் வாய்ப்புகளையும் தமிழ்நாடு தன்னகத்தே கொண்டுள்ளது.

2030ஆம் ஆண்டுக்குள் மொத்த மின் உற்பத்தியில் 50 சதவீதத்துக்கும் மேல் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் பங்களிப்பு இருக்கும் வகையில் பசுமை மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றுவதற்கு சிறப்பு நிறுவனம் ஒன்றை அரசு உருவாக்கும். மேலும், மாநிலத்தில் நிறுவப்பட்டுள்ள காற்றாலைகளின் செயல் திறனை மறு சீரமைக்க புதிய கொள்கை ஒன்றும் வகுக்கப்படும்.

மாநிலத்தின் உச்ச நேர மின் தேவையை நிறைவு செய்வதற்காக அரசு - தனியார் பங்களிப்புடன் (PPP) நீரேற்று மின் திட்டங்கள் நிறுவப்படும். குந்தாவில் கட்டப்பட்டு வரும் 500 மெகாவாட் திறன் கொண்ட புனல் மின் திட்டம் 2024-25ஆம் ஆண்டிற்குள் செயல்பாட்டிற்கு வரும். மேலும், 2030ஆம் ஆண்டுக்குள், 77,000 கோடி ரூபாய் செலவில் 14,500 மெகாவாட் திறன் கொண்ட 15 புதிய நீரேற்று மின் திட்டங்கள் அரசு தனியார் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும். மாநிலத்தில் நீரேற்று மின் திட்டங்களில் முதலீடுகளை ஊக்குவிக்க ஒரு விரிவான கொள்கையை அரசு வகுக்கும்.

மேலும், தற்போது நடைபெற்று வரும் 4,100 மெகாவாட் அனல் மின் திட்டப் பணிகள் விரைந்து முடிக்கப்படும்.
மின் பயன்பாட்டுத் தரவுகளை தானியங்கி முறையில் பெறுவதற்கு, முழு சீரமைக்கப்பட்ட மின் பகிர்மானத் திட்டத்தின் (RDSS) கீழ், கட்டணம் செலுத்தும் அனைத்து நுகர்வோர் இணைப்புகளுக்கும் முன்கூட்டியே கட்டணம் செலுத்தும் வசதியுடன் ‘திறன்மிகு மின் அளவிகள்’ (Smart meter) நிறுவப்படும். அரசால் மேற்கொள்ளப்பட்ட அடிப்படைச் சீர்திருத்தங்களின் விளைவாக, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் நிதிநிலை சற்று மேம்பட்டுள்ளது.

இதனால், இக்கழகத்தின் இழப்பு 2021-22ஆம் ஆண்டில் 11,955 கோடி ரூபாயிலிருந்து நடப்பாண்டில் 7,825 கோடி ரூபாயாக குறைய வாய்ப்புள்ளது. இந்த வரவு செலவுத் திட்டத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு அரசால் வழங்கப்படும் மானியங்களுக்காக 14,063 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ‘மாநகராட்சிப் பள்ளிகளையும் பள்ளிக் கல்வித்துறையில் இணைக்க வேண்டும்’ - ஆசிரியர்கள் கோரிக்கை

ABOUT THE AUTHOR

...view details