சென்னை:தமிழ்நாட்டில் வெளியாகும் ஆங்கில பத்திரிகைக்கு பேட்டியளித்த பா.ஜ.க. மாநிலத்தலைவர் அண்ணாமலையிடம், ”1991-96 ஊழல் மிக மோசமான காலகட்டங்களில் ஒன்றாக இருந்தது என்பதை நீங்கள் ஒப்புக் கொள்வீர்களா?” என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அண்ணாமலை, "தமிழகத்தில் பல நிர்வாகங்கள் ஊழல் நிறைந்தவை. முன்னாள் முதல்வர்கள் நீதிமன்றங்களில் தண்டிக்கப்பட்டுள்ளனர். அதனால்தான் தமிழகம் ஊழல் மிகுந்த மாநிலமாக மாறியுள்ளது. ஊழலில் முதலிடம் என்று சொல்வேன்" என கூறியிருந்தார்.
இதற்கு, எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் கடுமையான விமர்சனங்களை பா.ஜ.க மீதும், அண்ணாமலை மீதும் வைத்தனர். அ.தி.மு.கவினர் விமர்சனத்திற்கு பதிலளிக்கும் விதமாக பா.ஜ.கவினரும் அதிமுகவினர் மீது விமர்சனம் வைத்தனர். தொடர்ந்து அ.தி.மு.க - பா.ஜ.க தலைவர்களிடையே கருத்து மோதல்கள் ஏற்பட்ட நிலையில், இன்று சென்னை அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், ஜெயலலிதா மீது ஊழல் விமர்சனம் செய்த அண்ணாமலைக்கு எதிராக அ.தி.மு.கவினர் தீர்மானம் நிறைவேற்றினர்.
இந்த நிலையில், இது குறித்து பா.ஜ.கவின் மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இன்று அ.இ.அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களது தலைமையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர் கூட்டத்தில் எனக்கு எதிரான தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டதாக அறிகிறேன். அது மட்டும் அல்லாது நேற்று மற்றும் இன்று காலை, முன்னாள் தமிழக அமைச்சர்கள் சிலர் நான் ஆங்கில நாளேடுக்கு கொடுத்த பேட்டியை சரிவர புரிந்து கொள்ளாமல் எனக்கு எதிராக கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.
அவர்களைப் போல் தரம் தாழ்ந்த விமர்சனங்களை முன்வைக்க நான் விரும்பவில்லை. ஆனால் அவர்களுக்கும், தமிழக மக்களுக்கும் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சகோதர சகோதரிகளுக்கும் சிலவற்றைத் தெளிவுபடுத்துவது எனது கடமையாக உணர்கிறேன். தமிழகத்தில் ஊழல்தான் முக்கியப் பிரச்சினை. இத்தனை ஆண்டு காலம் ஒவ்வொரு குடிமக்களையும் சென்று சேர வேண்டிய நலத் திட்டங்கள், அரசியல்வாதிகளால் சுரண்டப்பட்டு, இறுதியில் பொதுமக்களுக்கு முழுமையாகச் சென்று சேர்ந்ததே இல்லை.
மக்களுக்கான நலத் திட்டங்களை இயற்றுவதை விட்டுவிட்டு, அதன் மூலம் சிலர் மட்டும் எவ்வாறு பயனடையலாம் என்ற நோக்கத்திலேயே திட்டங்கள் உருவாக்கப்பட்டு வந்திருக்கின்றன. இத்தனை ஆண்டுகளில், அடித்தட்டு மக்கள் தங்கள் நிலையிலிருந்து ஒரு படி முன்னேறியிருக்கிறார்களா என்றால் இல்லை என்பதே பதில் தேர்தல் வாக்குறுதிகளில் இலவசமும், தேர்தலின்போது பணமும் கொடுத்தால் போதும், அடுத்த ஐந்து ஆண்டுகளும் இந்த மக்களைச் சூறையாடலாம் என்ற எண்ணத்திலேயே ஆட்சி செய்து வந்திருக்கிறார்கள்.
ஏழை, எளிய மக்களை எப்போதும் கையேந்தி நிற்கும் நிலையிலேயே வைத்திருக்க விரும்புகிறார்கள். இந்த வகையான அரசியலை நான் வெறுக்கிறேன். பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களைப் பார்த்து அவரின் நடவடிக்கைகளால் ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு வந்தவன் நான். ஏழை எளிய மக்களின் மேம்பாட்டிற்காக தொடர்ந்து உழைக்கும் அந்த ஒற்றை மனிதரின் வழியில், தமிழகத்தில் நேர்மையான, மக்கள் நலனுக்கான அரசியலை முன்னெடுத்துச் செல்ல விரும்புகிறேன்.