சென்னை:தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2023 ஆம் ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடரின் மூன்றாம் நாள் இன்று (ஜன 12) தொடங்கியது. இதில், திருப்பூர் தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் செல்வராஜ், திருப்பூரில் நவீன வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானம் அமைக்கும் செயற்குறிப்பு அரசிடம் உள்ளதா? என கேள்வி எழுப்பினார்.
இதற்கு விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி, “சிக்கண்ணா கலைக்கல்லூரி வளாகத்தில் 8 ஏக்கர் பரப்பளவில் 18 கோடி செலவில் மாவட்ட விளையாட்டு வளாகம் அமைக்கப்பட்டு வருகிறது. பார்வையாளர்கள் மாடத்துடன் கூடிய திறந்தவெளி விளையாட்டு மைதானம், உடற்பயிற்சி கூடம், 400 மீட்டர் தடகள ஓட்ட பாதை, கால்பந்து, டென்னிஸ், கூடைப்பந்து உள்ளிட்ட ஆடுகள வசதிகள் உருவாக்கப்படும். அதேபோல் திறந்தவெளி விளையாட்டு அரங்கு கட்டும் பணிகள் பொதுப்பணித்துறையால் கடந்த 2021-ம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த பணிகள் 60 விழுக்காடு நிறைவடைந்துள்ளன” என பதிலளித்தார்.
பின்னர் மீண்டும் பேசிய செல்வராஜ், “இந்த விளையாட்டுத் திடல் திறப்பு விழாவிற்கு நீங்களே நேரில் வந்து திறந்து வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்ததோடு, தமிழர்களின் பாரம்பரியமிக்க கபடி போட்டிக்காக, தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் மறைந்த முதல்வர் கருணாநிதி பெயரில் உலகக் கோப்பை போட்டியை நடத்தி பெருமை சேர்க்க வேண்டும்” என்றார்.