3.12 PM
கேள்வி: அன்பில் மகேஷ் - மின் வாரியத்தில் அயல் மாநிலத்தவர்கள் வேலை பார்க்க அனுமதிக்க வேண்டாம். தமிழகத்திலேயே வேலையில்லா திண்டாட்டம் நிலவும்போது இது தேவை தானா?
பதில்: அமைச்சர் தங்கமணி -அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும் என்பது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு. ஆனால் இனிவரும் காலங்களில் வட மாநிலத்தவர்களுக்கு வேலை வழங்காத வகையில் அரசு நடவடிக்கை எடுக்கும்.
2.35 PM
பொய்யான வாக்குறுதி கொடுத்ததால்தான் அதிமுக வெற்றி பெறமுடியவில்லை என ஸ்டாலின் பேசினார்.
2:24 PM
ஓமந்தூரார் தோட்டத்தில் ஓமந்தூரார் அவர்களுக்கு சிலை நிறுவ வேண்டும், சென்னையில் கட்டபொம்மன் சிலை நிறுவ வேண்டும், எட்டையபுரத்தை தனி ஊராட்சி ஒன்றியமாக நிறுவ வேண்டும் என தூத்துக்குடி சின்னப்பன் கோரிக்கை.
1:55 PM
தேனி,சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் மிதக்கும் சூரிய சக்தி மின் அழுத்த பூங்கா மின் திட்டம். இத்திட்டத்திற்கான மதிப்பீடு ரூ. 1125 கோடி.
வைகை , மேட்டுர், பவானிசாகர் அணைகளின் நீர் தேக்க பகுதிகளில் இந்த மிதவை சூரிய மின் உற்பத்தி நிலையங்களை நிறுவிட முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த மிதவை சூரிய மின் உற்பத்தி நிலையங்களை சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆப் இந்தியா உடன் சேர்ந்து நிறுவிட உத்தேசிக்கப்பட்டுள்ளது .
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தால் , சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் முலம் 250 மெகாவாட் மிதவை சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் பொதுப்பணித்துறையின் நீர் தேக்க பகுதிகளில் உலக வங்கியின் 100 சதவீத பங்களிப்புடன் , ஒப்பந்த புள்ளி வாயிலாக விலை நிர்ணயம் செய்து , தமிழ்நாடு ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதியுடன் நிறுவிட உத்தேசிக்கப்பட்டுள்ளதாக கொள்கை விளக்க குறிப்பில் தகவல்.
1.50 PM
மது குடிப்பவர்கள் அளவாக குடித்தால் உடல் நலம் நன்றாக இருக்கும். அதிகமாக குடித்தால் நாம் என்ன செய்வது. மதுக்கடைகளை படிப்படியாகதான் அரசு குறைக்கிறது. உடனடியாக குறைத்தால் கள்ளச்சாராயம் புகுந்து விடும் என அமைச்சர் தங்மணி தெரிவித்தார்.
மேலும் அவர், ர் ஏற்றுமதியில் தமிழக அரசு ஒரே ஆண்டில் 5.77 கோடி வருவாய் ஈட்டியுள்ளது என்றார்.
1.40 PM
2018-19 ஆம் ஆண்டில் 52,39,015 பீர் பெட்டிகள் வெளி மாநிலங்களுக்கும், 8850 பீர் பெட்டிகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன
இதன் மூலம் 8 கோடியே 60 லட்ச ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக ஆயத்தீர்வை கொள்கை விளக்க குறிப்பில் தகவல்
1:25 PM
2018 - 19 ஆம் ஆண்டில் டாஸ்மாக் மூலம் கிடைத்த வருவாய் 31 ஆயிரத்து 157 கோடி ரூபாய்.
மதிப்புக் கூட்டு வரி 24 ஆயிரத்து 894 கோடி ரூபாய். ஆயத்தீர்வை வருவாய் 6863 கோடி ரூபாய் என மொத்தம் 31157 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது என மது விலக்கு ஆயத்தீர்வைத் துறை கொள்கை விளக்க குறிப்பேட்டில் தகவல்
1.20 PM
இந்த வருட இறுதிக்குள் வடசென்னை எண்ணூர் அனல் மின் நிலையம் 800 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறனுக்கு மேம்படுத்தப்பட்டு முதலமைச்சர் தலைமையில் திறந்து வைக்கப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.
மேலும் அவர், அனைவரும் ஒத்துழைத்தால்தான் தமிழகத்துக்கு நல்ல திட்டங்கள் செய்ய முடியும். தமிழகம் தொடர்ந்து மின்மிகை மாநிலமாக நீடிக்க வேண்டும் என்றால் அரசியலை கடந்து எதிர்கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.
12.40 PM
கடலில் தள்ளினாள் கட்டையாவேன் மணலில் தள்ளினாள் மட்டையாவேன் என கருணாநிதி குறித்து செந்தில் பாலாஜி பேசியதை குறிப்பிட்டு அமைச்சர் உதய குமார் பேசினார்.
திமுக பொருளாளர் துரைமுருகன் குறுக்கிட்டு, அதிமுகவில் இருந்து திமுகவை விமர்சித்த பாவத்தை கழுவதான் செந்தில் பாலாஜி திமுக வந்துள்ளார் என்றார்.
செந்தில் பாலாஜி தற்போதிருக்கும் கட்சிக்காவது விஸ்வாசமாக இருக்க வேண்டும். மீண்டும் இந்த பக்கம் வராமல் இருந்தால் சரி என முதலமைச்சர் கருத்து தெரிவித்தார். அதன்பிறகு மானியக் கோரிக்கைக்கான வாதம் தொடர்ந்தது.
12.30 PM
மானியக் கோரிக்கை மீதான விவாதம் தடைபடுகிறது என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். ஆனால் வாக்குவாதம் ஓயவில்லை.
12.26 PM
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முரசொலி பத்திரிகையில் செந்தில் பாலாஜியை காட்டமாக கட்டுரை வரையப்பட்ட ஆதாரம் காட்டிப் பேசினார். அப்போது பத்திரிகை ஆதாரம் காட்டி பேசக் கூடாது என சபாநாயகர் பலமுறை திமுகவினரை சுட்டிக்காட்டியதை எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் நினைவு கூர்ந்தார்.
சபாநாயகர் பத்திரிக்கை ஆதாரத்தை சுட்டிக்காட்டிப் பேசுவது தவறு, பத்திரிகைச் செய்தியாக பேசினால் தவறு இல்லை என தெரிவித்தார். அப்போது அதற்கு எதிர்ப்புத் தெரிவித்துப் பேசிய எதிர்கட்சி தலைவர் மு க ஸ்டாலின், ஓ பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தியபோது கொடுக்கப்பட்ட பேட்டிகளை பத்திரிகைச் செய்திகளாக நானும் சுட்டிக்காட்டு பேசவா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த முதலமைச்சர், திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் வந்ததைதான் சுட்டிக்காட்டியதாக தெரிவித்தார். அதற்கு பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின், அதேபோல் அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது எம்.ஜி.ஆர் பத்திரிகையில் வந்த செய்திகளை சுட்டிக்காட்டி நானும் பேசவா என்றார்.
ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் குறித்தும், ஜெயலலிதா மரணம் குறித்தும் துணை முதலமைச்சரிடம் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
இதற்கு ஓபிஎஸ், ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகி எப்போது வேண்டுமானாலும் விளக்கம் அளிக்க தயாராக உள்ளேன். கடந்த நான்கு முறை சம்மன் அனுப்பியபோது, இரண்டு முறை ஆஜராக முடியவில்லை. தற்போது நீதிமன்ற இடைக்கால தடை உள்ளது. தடை நீங்கி விசாரணைக்கு அழைக்கும் பட்சத்தில் கண்டிப்பாக ஆஜராகி உண்மையை எடுத்துரைப்பேன் என பதில் அளித்தார்.
12.22 PM
துணை முதலமைச்சர் பற்றி முதலமைச்சர் பேசியதை நான் கூறவா என ஸ்டாலின் கேள்வி.
12:19 PM
என் தகுதியை பற்றி பேச செந்தில் பாலாஜிக்கு தகுதி இல்லை என்று ஸ்டாலின் தெரிவித்தது முரசொலி பத்திரிக்கையில் வந்துள்ளது
2.4.2013 அன்று எதிர்கட்சித் தலைவர் கவன ஈர்ப்பு தீ்ர்மானம் கொண்டுவந்தார். அப்போது போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்தும், 200 கோடி போக்குவரத்து ஊழல் குறித்தும் பேசினார் என முதலமைச்சர் தெரிவித்தார்.
முதலமைச்சரின் பேச்சுக்கு திமுக பொருளாளர் துரைமுருகன் எதிர்ப்பு தெரிவித்தார். அதற்கு முதலமைச்சர், எங்களை பற்றி பேசினால் நாங்கள் பேசிதான் ஆக வேண்டும் என்றார்.
12.15 PM
செந்தில் பாலாஜி குறித்து துணை முதல்வர் ஓபிஎஸ் விமர்சனம் செய்ததற்கு, இதற்கு முன் பேசியதை இங்கு பேசினால் என்னவாகும் என ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். அப்போது ஓபிஎஸ்ஸின் தர்மயுத்தம் குறித்து விமர்சிக்கப்பட்டது.
அதற்கு ஓபிஎஸ், நான் தர்ம யுத்தம் நடத்தினேன். ஆனால் செந்தில் பாலாஜி திமுக, அதிமுக, அமமுக, திமுக என்று மாறி மாறி செல்கிறார். அவரும் அம்மா முன்பு குனிந்து நின்றதை நன் பார்த்து இருக்கிறேன். புகைப்படங்களும் இருக்கின்றன, செந்தில் பாலாஜி காலில் ஸ்கேட்டிங் கட்டி மாறி மாறி கட்சி மாறி செல்ல வேண்டாம் என்று அறிவுரை கூறுங்கள் என ஸ்டாலினுக்கு பதிலளித்தார்.