தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'ஆளுநர் ரவிக்கு அரசியலமைப்புச் சட்டம் தெரியவில்லை' - டி.கே.எஸ் இளங்கோவன்!

இந்த நாட்டில் ஆளுநர் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது பற்றிக் கூட அவருக்கு தெரியவில்லை என திமுக செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ் இளங்கோவன் ஆளுநர் ரவியை விமர்சித்துள்ளார்.

Etv Bharat டி.கே.எஸ் இளங்கோவன்
Etv Bharat டி.கே.எஸ் இளங்கோவன்

By

Published : May 4, 2023, 9:28 PM IST

திமுக செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ் இளங்கோவன் பிரத்யேகப் பேட்டி

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ் இளங்கோவன் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு சிறப்புப்பேட்டி வழங்கியுள்ளார். அப்போது அவர் பேசுகையில், "தமிழ்நாடு ஆளுநர் திராவிட மாடல் இல்லை என்கிறார். ஆனால், திராவிட மாடல் மாதிரி ஒரு மாடல் வேண்டும் என வட மாநிலங்களில் உள்ள பல அரசியல் தலைவர்கள் போராட்டக் களத்தில் இறங்கிப் போராடி வருகின்றனர். திராவிட மாடல் என்றால் என்ன என்று ஆளுநருக்குத் தெரியவில்லை. திராவிட மாடல் என்றால் சமத்துவம், ஆண், பெண் சமத்துவம், மனிதனுக்குள்ளே சமத்துவம், மனுதர்மம் அற்ற சமுதாயம், வர்ணாசிரம பிரிவுகள் இல்லாத சமுதாயம் தான், திராவிட மாடல்.

வள்ளுவரின் ‘பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும்’ என்ற தத்துவம் தான் திராவிட மாடல். அந்த தத்துவம் செத்துவிட்டால் மனித குலத்தில் மீண்டும் அழிவு தோன்றுவிடும். மனித குலத்தில் சமத்துவம் இருக்காது. அதை ஆளுநர் விரும்புகிறார். தென்னாட்டினைப் பொறுத்தவரை பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் எனப் பல சாதியினர் உள்ளனர். அதன் தலைவர்கள் எல்லாம் ஆண்ட சாதி என்று சொல்வார்கள். ஏன் அப்படி சொல்கிறார்கள் என்றால்? வடநாட்டில் சத்திரியர்கள் தான் மன்னர்களாக வர முடியும் என்பதைப் போன்ற நிலை இங்கே இல்லை. வீரமானவர் யாரும், தகுதி உள்ளவர் யாராக இருந்தாலும் இங்கே மன்னனராக முடியும் என்ற நிலை இருந்தது.

அப்படியாகத் தான் சேர, சோழ, பாண்டியர்கள் இருந்திருக்கிறார்கள். அதனால் தான் இவர்கள் ஆண்ட பரம்பரை என்று சொல்கிறார்கள். அந்த அளவுக்கு சமத்துவம் நிறைந்த இந்த பூமியிலேயே, வடநாட்டு மனுதர்மம் இந்த சமத்துவத்தை கெடுத்து, தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்வி உரிமையைத் தடுத்து, ஆட்சி நிர்வாக உரிமையை மறுத்ததின் விளைவாகத் தான், திராவிட இயக்கம் தோன்றி மீட்டெடுக்கும் முயற்சியில் தான், திராவிட இயக்கம் பாடுபட்டது. அந்த எண்ணத்தில் தான் செயல்பட்டது. இந்த மாடல் தவறு என்று ஆளுநர் சொன்னார் என்றால், அவர் மீண்டும் மனுதர்மத்தை திணிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார் என்று பொருள்.

'ஒரே நாடு, ஒரே பாரதம்' என்று எப்போது வந்தது? இவர்களுக்கெல்லாம் வரலாறே தெரியாது. இந்தியா 1947ஆம் ஆண்டு வெள்ளையர்களிடமிருந்து சுதந்திரம் பெற்றது. வெள்ளையர்கள் இந்தியா முழுவதுமா ஆட்சி புரிந்தார்கள்? தென்னகத்தில் சென்னை மாகாணத்தில் ஆங்கிலேயர்கள் ஆட்சி புரிந்தார்கள். பக்கத்திலுள்ள ஹைதராபாத்தில் தனியாக ஒரு மன்னர் ஆட்சி புரிந்தார். மைசூர் மற்றும் திருவாங்கூரில் தனித்தனியாக மன்னர்கள் ஆட்சி நடைபெற்றது. இவர்கள் ஆண்ட பகுதியில் தான் பெரும் பகுதி, ஒருவேளை மன்னர்கள் ஆங்கிலேயர்களுடன் ஒத்துப் போய் இருக்கலாம். ஆனாலும் நேரடியாக ஆங்கிலேயர் ஆட்சி தென்னாட்டிலே இல்லை” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய டி.கே.எஸ் இளங்கோவன், “வெள்ளையர்கள் ஆண்ட பகுதி என்பது சென்னை மாகாணம், கல்கத்தா மாகாணம், மும்பை மாகாணம், மத்திய சென்ட்ரல் என்ற ஒரு பகுதி. இங்கிருந்து தான் வெள்ளையர்களை அப்புறப்படுத்துவதற்கான போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டத்தில் தமிழ்நாட்டைச் சார்ந்த தலைவர்கள் ஈடுபட்டனர். கல்கத்தாவில் சிப்பாய் கலகம் தோன்றுவதற்கு முன்னதாகவே, முதன் முதலில் பூலித்தேவன் என்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மன்னன் ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டத்தைத் தொடங்கினார்.

வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ. சிதம்பரனார், பாரதியார் உள்ளிட்ட அநேக பேர் வெள்ளையருக்கு எதிராகப் போராடினர். தமிழர்கள் தீவிரமாக ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடினார்கள் என்பது யதார்த்தமான உண்மை. ஆங்கிலேயரின் ஆட்சிக்குப் பிறகு, அப்போதைய உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் பட்டேல், ஹைதராபாத் நிஜாம், மைசூர் மகாராஜா, மேலும் வடக்கே உள்ள பல்வேறு மன்னர்களைச் சந்தித்து, நீங்கள் எல்லோரும் இந்தியாவில் சேர்ந்து கொள்ளுங்கள். உங்களுக்கு நாங்கள் மானியம் தருகிறோம். மன்னர் மானியம் என்பது விடுதலைக்குப் பிறகு வந்தது.

பல நாடுகளை ஒன்றிணைத்து அவர்களுக்கெல்லாம் ஆண்டுதோறும் மானியம் வழங்கி, ஒற்றை இந்தியாவாக மாற்றினார்கள். அதுவரை இந்தியா ஒரு நாடாக இல்லை. இந்திய ஒற்றுமைக்கு நாங்கள் ஊறு விளைவிக்கின்றோம் என்று பேசுகிறார்கள். ஆனால், எங்களைப் போன்று இந்திய விடுதலைக்குப் பாடுபட்டவர்கள் யாரும் கிடையாது. இந்தியா, பாகிஸ்தான் போர் நடக்கும்போது திராவிட முன்னேற்றக் கழகம் மிகப்பெரிய அளவிலே நிதி சேர்த்து ஒன்றிய அரசிடம் வழங்கினார்கள்.

அதேபோல சீனப்போரிலும் நிதி வழங்கினார்கள். இந்தியாவோடு இணைந்து எங்கள் உரிமைக்காக போராடுவது என்பதே வேறு. நாங்கள் தனிநாடு கேட்பதை எப்போதே விட்டுவிட்டோம். நாங்கள் மொழி உரிமைகளை பண்பாட்டு உரிமைகளை காப்பாற்றிக்கொள்ள பாடுபடுகிறோம் அவ்வளவுதான். இது அவர்களுக்கு பிடிக்கவில்லை. காரணம் உரிமைகளை கொடுக்கக் கூடாது என்று நினைப்பவர்கள்.

90 விழுக்காடு இந்துக்கள் தாழ்த்தப்பட்டவர்களாகவும் பிற்படுத்தப்பட்டவர்களாகவும் இருக்கிறார்கள். இவர்களுடைய உரிமையைப் பறித்தது யார்? நாங்களா? அவர்கள் இந்துக்கள் தானே. அவர்களுக்காக போராடத்தானே இந்த இயக்கமே தொடங்கப்பட்டது. எல்லா வாதத்திலும் பொய்களை மட்டுமே பிரசாரம் செய்யும் விதமாக ஆளுநர் பேசி வருகிறார். குற்றச்சாட்டுகள் சொல்வது ஆளுநர் வேலை அல்ல. அவர்களுக்கு அரசியலமைப்புச் சட்டம் என்பது தெரியவில்லை. இந்த நாட்டில் ஆளுநர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றி கூட அவருக்குத் தெரியவில்லை.

அரசியலமைப்பு சட்டம் என்ன சொல்கிறது, அமைச்சரவையின் கருத்துருவைப் பெற்று ஆளுநர் நடந்து கொள்ள வேண்டும். எந்த ஒரு அரசியலமைப்புச் சட்டமும், ஒரு சட்ட மசோதா ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைத்தவுடன் அதில் அரசியலமைப்புச் சட்டத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் முரண்பாடு இருந்தால் உடனடியாக குறிப்பு எடுத்துக் கொண்டு அமைச்சரவைக்குத் திருப்பி அனுப்ப வேண்டும். தானே வைத்துக் கொண்டு இது அரசியலமைப்புக்கு முரணானது என்று சொல்லுகின்ற வேலையல்ல. ஒன்று நிராகரிக்க வேண்டும் அல்லது ஏற்றுக்கொள்ள வேண்டும். இரண்டையும் செய்யாமல் இவர் பொதுவெளியில் பேசிக்கொண்டிருக்கிறார் என்றால் ஆளுநர் பதவி என்பது என்ன என்பது கூட தெரியாமல் இருக்கிறார் என்பது பொருள்'' என்றார்.

மேலும் பேசிய அவர், ''பாஜக என்ற கட்சி இந்தியாவில் ஆட்சிக்கு வந்த உடன்தான் இந்தியாவில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று குற்றச்சாட்டை வைக்கிறேன். அவர்களை மறுக்கச் சொல்லுங்கள் பார்க்கலாம்? கோடி கோடியாக கொள்ளை அடித்தவனை கைது செய்தபோது பாஜகவில் இருப்பது தெரிய வருகிறது. பல குற்றங்களை செய்தவர்கள் பாஜகவில் உள்ளனர். தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக திகழ்கிற காரணத்தால்தான் வடநாட்டில் இருந்து அநேக மக்கள் இங்கு வருகை தந்து அமைதியாக வாழ்கிறார்கள்.

மக்களை மதிக்கின்ற அரசாங்கமாக இன்றைய தமிழ்நாடு அரசு உள்ளது. மேலும் முதலமைச்சர் ஸ்டாலின் மக்களைச் சந்திக்கும் போது மக்களிடம் மனுக்களைப் பெற்று மக்கள் குறைகளைத் தீர்த்து வருகிறார். மாற்றுத்திறனாளிகள், பெண்கள், பட்டியலினத்தவர்களுக்கு நல திட்டங்களை வழங்கும் அரசாக உள்ளது. திமுக மக்களுக்கு நன்மை செய்கின்ற அரசாக திகழ்கிறது.

இப்படி ஒரு ஆளுநரை இந்தியாவில் எங்கும் பார்க்க முடியாது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் என்ன அதிகாரத்தை ஆளுநருக்கு வழங்கி இருக்கிறதோ, அதன்படி நடந்து கொள்ள வேண்டும். மத்தியில் ஆளும் கட்சியின் கொள்கைகளை பேசுவதற்கு ஆளுநர் ஆள் இல்லை, கொள்கைகள் என்பது அரசியல் கட்சிகள் பேசுவது, ஆளுநர் பேச வேண்டியது அல்ல. அரசியலமைப்புச் சட்டம் தான் ஆளுநருக்கு ஒற்றைக் கொள்கையாக இருக்க வேண்டும், இதன் அடிப்படையில் அவர்கள் செயல்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:Bihar: பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்புக்குத் தடை - பாட்னா உயர் நீதிமன்றம் அதிரடி!

ABOUT THE AUTHOR

...view details