சென்னை:தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளாக திருக்கோயில்களில் காணிக்கையாக வரப்பெற்ற பலமாற்று பொன் இனங்களில், திருக்கோயிலுக்குத் தேவைப்படும் இனங்கள் நீங்கலாக, ஏனைய இனங்களை மும்பையிலுள்ள மத்திய அரசுக்குச் சொந்தமான தங்க உருக்காலையில் உருக்கி, சொக்கத்தங்கமாக மாற்றி திருக்கோயிலுக்கு வருவாய் ஈட்டும் வகையில் வங்கிகளில் முதலீடு செய்து, அதிலிருந்து பெறப்படும் வட்டி மூலமாக திருக்கோயில்களுக்கு திருப்பணிகள் மேற்கொள்ளப்படும் - இப்பணிகளை கண்காணிப்பதற்கு 3 மண்டலங்கள் ஏற்படுத்தப்பட்டு, ஓய்வுபெற்ற மாண்பமை நீதியரசர்கள் தலைமையிலான குழுக்கள் மூலம் பணிகள் மேற்கொள்ளப்படும் என கடந்த 2021-2022ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் சென்னை, திருச்சி மற்றும் மதுரை ஆகிய மூன்று பகுதிகளாக பிரித்து, ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதியரசர் துரைசாமி ராஜு மற்றும் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர்கள் க.ரவிச்சந்திர பாபு, ஆர்.மாலா ஆகியோர் தலைமையில் தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டன.
இதில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு பக்தர்களால் உண்டியல் மற்றும் காணிக்கையாக செலுத்தப்பட்ட பலமாற்று பொன் இனங்கள், ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் ஆர்.மாலா தலைமையிலான குழுவினர் முன்னிலையில் மதிப்பீடு செய்யப்பட்டு, அரக்கு, அழுக்கு, போலிக்கற்கள் மற்றும் இதர உலோகங்களை நீக்கி, பிரித்தெடுக்கப்பட்ட பலமாற்றுப் பொன் இனங்கள் அறங்காவலர் குழு தீர்மானத்தின் அடிப்படையில் மும்பையிலுள்ள மத்திய அரசுக்கு சொந்தமான உருக்காலையில் உருக்கி சுத்த தங்கக் கட்டிகளாக மாற்றி, பாரத ஸ்டேட் வங்கியின் Revamped Gold Deposit Scheme, 2015 திட்டத்தின் கீழ் தங்கப் பத்திரமாக முதலீடு செய்திடும் பொருட்டு, 168 கிலோ 68 கிராம் 889 மில்லி கிராம் எடையுள்ள சுத்த தங்கக்கட்டிகள் திருக்கோயில் நிர்வாகத்தின் மூலம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பெயரில் பாரத ஸ்டேட் வங்கி, மும்பை கிளையில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. அதன் மதிப்பு 99 கோடியே 77 லட்சத்து 64 ஆயிரத்து 472 ரூபாய் ஆகும். மேற்படி தங்க மதிப்பீட்டிற்கு வழங்கப்படுகின்ற வட்டி வீதம் 2.25% ஆகும். இதன் மூலம் ஆண்டொன்றுக்கு கிடைக்கப்பெறும் வட்டித்தொகையான 2.25 கோடி ரூபாய் இத்திருக்கோயில் மேம்பாட்டு பணிகளுக்கு பயன்படுத்தப்படவுள்ளது.