சென்னை:தீபாவளிப் பண்டிகையையொட்டி பயணிகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி அனைத்து ரயில் நிலையங்களிலும் சுமார் 1,700 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ரயில்வே ஏ.டி.ஜி.பி வனிதா மேற்பார்வையில் 7 துணை காவல் கண்காணிப்பாளர்கள், 25 காவல் ஆய்வாளர்கள், 80 உதவி காவல் ஆய்வாளர்கள் மற்றும் 1,600 காவலர்களைக் கொண்டு ரயில் நிலையங்களில் தொடர் பாதுகாப்பு வழங்கப்படுவதாகவும், ரயில் நிலைய நுழைவு வாயில்களிலேயே அனைத்து பயணிகளின் உடைமைகள் சோதனை செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தண்டவாள ரோந்து அலுவலுக்குக் காவலர்கள் நியமிக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிப்பு பணி நடைபெற்று வருவதாகவும், பெண் பயணிகள் பாதுகாப்பிற்குச் சீருடை மற்றும் சாதாரண உடையில் காவலர்கள் நியமிக்கப்பட்டுப் பாதுகாப்பு வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் சாதாரண உடைகளில் காவலர்கள் கண்காணிப்பு பணியில் உள்ளதாகவும், ரயில்களில் வெடி பொருட்கள் எடுத்துச் செல்வதைக் கண்காணிக்கவும் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.