சென்னை:காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் பகுதியைச் சேர்ந்தவர் அளவூர் நாகராஜன் (55). இவர் காங்கிரஸ் கட்சியின் காஞ்சிபுரம் மாவட்ட தலைவராகவும், வாலாஜாபாத் ஒன்றிய கவுன்சிலராகவும் இருந்து வந்துள்ளார். இவர், நேற்று (செப்.25) சென்னையில் நடந்த கட்சி கூட்டம் ஒன்றில் பங்கேற்று வீடு திரும்பிய போது, தாம்பரம் அடுத்த செம்பாக்கம் அருகே சாலையோர தள்ளுவண்டிக் கடையில் உடன் இருந்தவர்களுக்கு உணவு வாங்கிக் கொடுத்து அருகில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது மதுபோதையில் சரக்கு வாகனத்தை இயக்கி வந்த நபர்கள் நாகராஜன் மீது மோதி அருகில் நின்று கொண்டிருந்த அமரர் ஊர்தி வரை இழுத்துச் சென்றனர். பின்னர் வாகனத்தை இயக்கிய நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்ற நிலையில், சம்பவ இடத்தில் இருந்த நபர்கள் நாகராஜனை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் நாகராஜன் இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து, தகவலறிந்து சென்ற பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, விபத்து ஏற்படுத்திய சரக்கு வாகன பதிவு எண்ணைக் கொண்டு தாம்பரத்தைச் சேர்ந்த வாகனத்தின் உரிமையாளர் கிஷோர் பீட்டர்ஸை (42) பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது, அவர் கொடுத்த தகவலின் மூலம் வாகன ஓட்டுநர் உதயசீலன் (23), வாகனத்தில் உடன் இருந்த நிவேதன் (19) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.