சென்னை மந்தைவெளியைச் சேர்ந்த மூதாட்டி சுதா ஸ்ரீதரனிடம், கடந்த 2019ஆம் ஆண்டு செல்போன் மூலம் இன்சூரன்ஸ் நிறுவனத்திலிருந்து பேசுவதாகக் கூறி அடையாளம் தெரியாத நபர்கள் அறிமுகமாகினர்.
அப்போது அவர்கள், "இறந்துபோன கணவரின் இன்சூரன்ஸ் பணம் நிலுவையில் இருக்கிறது. அதை நாங்கள் பெற்றுத் தருவதாகக் கூறி, அவரை நம்ப வைத்துள்ளனர். இதனை நம்பி அவர் தனது வங்கி கணக்கிலிருந்து 2 கோடியே 6 லட்சம் ரூபாய் பணத்தைச் முன் பணமாக செலுத்தியுள்ளார். பணத்தைப் பெற்றுக்கொண்ட அவர்கள், சுதா ஸ்ரீதரன் தொடர்பைத் துண்டித்துள்ளனர்.
இதனையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சுதா, சென்னை ஆணையரிடம் புகார் அளித்தார். அப்புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து, மத்திய குற்றப்பிரிவு வங்கி மோசடி பிரிவு காவல் துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில், இதுதொடர்பாக கடந்த மார்ச் மாதம் டெல்லியில் வசிக்கும் அமன் பிரசாத் உள்பட மோசடி கும்பலை சேர்ந்த ஆறு நபர்களையும் சிம்ரன்ஜித் என்பவரையும் கைது செய்தனர்.
மேலும் டெல்லியில் முகாமிட்டு தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவரும் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் தலைமறைவாக இருந்த ஹன்சிகா சிவானி (எ) பிரியா சர்மா, அமித் குமார், அக்ஷத் குப்தா ஆகிய மூவரை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்து, சிறையில் அடைத்தனர்.