சென்னை:இதுகுறித்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “விளிம்பு நிலை மக்களுக்கான பொருளாதார முன்னேற்றமே அவர்களுக்கான சமூக நீதியாக அமையும் என்பதில் உறுதியான நம்பிக்கை உடைய தமிழ்நாடு முதலமைச்சரின் எண்ணத்திற்கு உரு கொடுக்கும் வகையில், 2022 - 2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட உரையில், விளிம்பு நிலையில் இருக்கும் இருளர்கள் போன்ற பண்டைய பழங்குடியினருக்கு (Particularly Vulnerable Tribal Groups) வரும் நிதியாண்டில் மேலும் 1,000 புதிய வீடுகள் ரூ.50 கோடி மதிப்பீட்டில் கட்டித் தரப்படும்.
இதனை செயல்படுத்தும் வகையில், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நீலகிரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, இராணிப்பேட்டை, திருப்பத்தூர், கோயம்புத்தூர், கடலூர், தருமபுரி மற்றும் திருப்பூர் ஆகிய 12 மாவட்டங்களில், சமதளப்பரப்பில் ஒரு வீட்டிற்கு ரூ.4,37,430 வீதம் 726 வீடுகளுக்கு ரூ.31,75,74.180 என்வும், மலைப்பகுதியில் ஒரு வீட்டிற்கு ரூ.4,95,430 வீதம் 368 வீடுகளுக்கு ரூ.18,23,18,240 என மொத்தம் 1,094 வீடுகள் கட்டுவதற்கு ரூ.49,98,92,420 நிதி ஒதுக்கீடு செய்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது.