தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் களம் களைகட்டி பரப்புரையில் அனல் கூடியிருக்கிறது. ஸ்டாலின்தான் வாராரு விடியல் தரப் போறாரு என திமுகவும், தொடரட்டும் வெற்றிநடை என்றென்றும் இரட்டை இலை என அதிமுகவும், வீறுநடை போடுவோம் நாம் தமிழராய் என நாம் தமிழர் கட்சியும், தமிழகம் விற்பனைக்கல்ல என மக்கள் நீதி மய்யமும் களத்தில் குதித்துள்ளன.
பலமுனைப் போட்டி நிலவினாலும் திமுக, அதிமுக ஆகிய கட்சிகளுக்கிடையிலான போட்டிதான் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது களமிறங்கியிருக்கும் வேட்பாளர்களில் இதுவரை சட்டப்பேரவைத் தேர்தலை அதிக முறை சந்தித்தவர்கள் யார் யார்?
இந்தப் பட்டியலில் திமுகவின் பொதுச்செயலாளரும், காட்பாடி தொகுதி திமுக வேட்பாளருமான துரைமுருகன் சூப்பர் சீனியராக இருக்கிறார். கருணாநிதி தலைமையில் முதல்முதலாக திமுக சந்தித்த 1971ஆம் ஆண்டு தேர்தல் முதல் அவரது மறைவுக்கு பிறகு தற்போது நடக்கும் 2021 தேர்தல் என அவர் அனைத்து தேர்தல்களிலும் களம் கண்டிருக்கிறார். இந்தத் தேர்தல் அவருக்கு 12ஆவது தேர்தல் ஆகும்.
11 முறைகளில் இரண்டு முறை மட்டும் தோல்வியடைந்திருக்கும் துரைமுருகன் 9 முறை காட்பாடி தொகுதியிலும், இரண்டு முறை ராணிப்பேட்டையிலும் களம் கண்டிருக்கிறார்.
துரைமுருகனுக்கு அடுத்தபடியாக அதிமுகவின் சபாநாயகர் தனபால் முதல்முதலாக, 1977ஆம் ஆண்டு எம்ஜிஆர் தலைமையில் தேர்தலை சந்தித்தார். அதன்பிறகு நடந்த 1980, 84,89, 2001ஆம் ஆண்டு தேர்தல்களில் சங்ககிரியில் களமிறங்கிய அவர் 2011ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ராசிபுரம் தொகுதியிலும், 2016ஆம் ஆண்டு அவினாசியிலும் களமிறங்கியிருக்கிறார். 2021 தேர்தலிலும் அவர் அவினாசியிலேயே களமிறங்குகிறார்.
தனபாலுக்கு அடுத்ததாக, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், முத்துசாமி, மு.க. ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி இருக்கின்றனர்.
2001ஆம் ஆண்டு தேர்தலைத் தவிர்த்து கோபிசெட்டிப்பாளையம், சத்தியமங்கலம் தொகுதிகளில் களமிறங்கியிருக்கும் செங்கோட்டையன் 1996ஆம் ஆண்டு தேர்தலில் மட்டும் தோல்வியடைந்திருக்கிறார். 1977ஆம் ஆண்டு அதிமுக சந்தித்த முதல் சட்டப்பேரவைத் தேர்தல் களத்தில் குதித்து வெற்றி பெற்ற இவர், ஜெயலலிதாவின் அமைச்சரவையில் அமைச்சராகவும் பொறுப்பு வகித்தார்.
அதேபோல் எம்ஜிஆருக்கு நெருக்கமான கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் இதுவரை 10 தேர்தல்களை சந்தித்துள்ளார். சாத்தூர் தொகுதியிலிருந்து மட்டும் ஆறு முறை எம்.எல்.ஏவாக சட்டப்பேரவைக்குள் சென்ற கே.கே.எஸ்.எஸ்.ஆர், தான் சந்தித்த 10 தேர்தல்களில் இரண்டு முறை தோல்விகளை சந்தித்துள்ளார். 2021ஆம் ஆண்டு தேர்தலில் அவர் திமுக சார்பில் அருப்புக்கோட்டை தொகுதியில் களமிறங்கியிருக்கிறார்.
கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் 1977, 1980, 1984, 1991ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் அதிமுக சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வான முத்துசாமி தற்போது திமுக முகாமில் இருக்கிறார். 2011, 2016ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியிலும், ஈரோடு மேற்குத் தொகுதியிலும் திமுக சார்பாக களம் கண்டு தோல்வியடைந்த அவர் 2021 தேர்தலில் மீண்டும் திமுக சார்பில் ஈரோடு மேற்குத் தொகுதியில் களமிறங்கியிருக்கிறார்.
1984ஆம் ஆண்டு தேர்தல் தொடங்கி 2016ஆம் ஆண்டு தேர்தல்வரை மொத்தம் 8 முறை தேர்தல் களம் கண்டிருக்கும் திமுக தலைவரும், கொளத்தூர் தொகுதி திமுக வேட்பாளருமான மு.க. ஸ்டாலினுக்கு இது ஒன்பதாவது தேர்தல். 1984, 1991 தேர்தல்களில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்திருக்கும் அவர், 1989, 1996, 2001, 2006 தேர்தல்களில் அதே தொகுதியின் எம்.எல்.ஏவானார். ஆனால் 2011 மற்றும் 2016ஆம் ஆண்டு தேர்தல்களில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏவானார். அவர் இப்போதும் கொளத்தூரிலேயே களமிறங்கியிருக்கிறார்.
எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு அதிமுக ஜெ அணி, ஜா அணி பிரிந்திருந்தபோது தற்போதைய முதலமைச்சரும், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி 1989ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஜெயலலிதா அணியில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு எடப்பாடி தொகுதி எம்.எல்.ஏவானார். 1991ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர் 1996ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வியடைந்தார்.
2006ஆம் ஆண்டு தேர்தலில் அதே எடப்பாடி தொகுதியில் தோல்வியடைந்த அவர் 2011, 2016ஆம் ஆண்டு தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். எடப்பாடி தொகுதியில் தொடர்ந்து போட்டியிடும் அவர் தற்போதும் எடப்பாடியில் களம் காண்கிறார். அவருக்கு இது ஏழாவது தேர்தல்.
இப்படி தொடர்ந்து தேர்தல் ரேஸில் ஓடிக்கொண்டிருக்கும் குதிரைகள் இந்தத் தேர்தலிலும் களம் கண்டிருக்கின்றன. இந்தக் குதிரைகள் அனைத்தும் வெற்றியடைந்து சட்டப்பேரவைக்குள் மீண்டும் நுழையுமா? மே இரண்டாம் தேதி விடை.
இதையும் படிங்க: நெருங்கும் தேர்தல்... கடந்த காலங்களில் நடந்தது என்ன?