சென்னை : சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் முதலமைச்சர் மு.க ஸ்டாலினை சந்தித்தார். நேற்று சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அயோத்திதாசப் பண்டிதர் மணிமண்டபம் அமைக்கப்படும் என்ற அறிவிப்புக்கு நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.
இதையடுத்து செய்தியாளரை சந்தித்து பேசிய அவர், "முதலமைச்சரை நேரில் சந்தித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நன்றி தெரிவித்தோம். தமிழ் சமூகத்தின் மேம்பாட்டிற்காக தன்னை முழுமையாக ஒப்படைத்துக் கொண்ட தலைவர்களை நினைவுகூர்ந்து அவர்களைப் போற்றும் வகையில் அவர்களின் பங்களிப்பை வருங்கால தலைமுறையினருக்கு உணர்த்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை திமுக அரசு மேற்கொண்டு வருகிறது.
குறிப்பாக நேற்று இரண்டு அறிவிப்புகள் 110 விதியின் கீழ் முதலமைச்சர் வெளியிட்டார். வ.உ.சி.யின் 120ஆவது பிறந்த நாளை முன்னிட்டு 14 அறிவிப்புகளை வெளியிட்டார். கட்சி சார்பற்ற முறையில் மக்களுக்காக தொண்டாற்றியவர்களை போற்றும் பண்பு மிக உயரிய பண்பு அந்த வகையில் அரசுக்கு பாராட்டு தெரிவித்தோம்.