திருவள்ளுவர் கோயில் : சிலை பிரதிஷ்டை தஞ்சாவூர்:சங்கக் காலத்தில் வாழ்ந்த தமிழ் புலவர்களில் திருவள்ளுவரும் ஒருவர். இவர் இயற்றிய திருக்குறள் உலகப் பொதுமறை நூல் என அழைக்கப்படுகிறது. இதில் உள்ள கருத்துக்கள் உலகம் முழுவதிலும் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் பொருந்தும் வகையில் திகழ்கிறது. இத்தகைய மா மனிதனுக்கு கோயில் காண்பது அரிது.
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா சாலியமங்கலம் பகுதியில் உள்ள திருவள்ளுவர் தெருவில், உலகப் பொதுமறை திருக்குறளை இயற்றிய அய்யன் திருவள்ளுவருக்கு மடம் ஒன்றை கட்டி கிராம மக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர். தற்போது அதன் அருகில் திருவள்ளுவருக்கு என புதிதாக கோயில் ஒன்றை கட்டி வருகின்றனர்.
கோயில் கட்டுமானப் பணி முடிவடைந்து விரைவில் திருவள்ளுவர் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால் திருவள்ளுவர் கோயில் கருவறையில் வைப்பதற்காக ஐம்பொன்னால் ஆன மூலவர் சிலை ஒன்றையும், திருவள்ளுவர் கற்சிலை ஒன்றையும் தயார் செய்து பிரதிஷ்டை செய்ய முடிவு செய்தனர்.
அதன்படி இரண்டரை அடி உயரம் உள்ள ஐம்பொன் திருவள்ளுவர் சிலை மற்றும் நான்கடி உயரமுள்ள கற்சிலை ஆகியவற்றை கும்பகோணம் அருகே உள்ள பஞ்சலோக சிற்ப கூடத்தில் தயார் செய்து கொண்டு வந்தனர். பின்னர் சிலைகளை அலங்கார வாகனத்தில் வைத்து மேள தாள வாத்தியம் முழங்க வாண வேடிக்கையுடன், சாலியமங்கலத்தின் முக்கிய வீதிகள் வழியாக கிராம மக்கள் ஊர்வலமாக எடுத்து சென்று கோயிலில் பிரதிஷ்டை செய்தனர்.
இதையும் படிங்க: பெரம்பலூர் செட்டிகுளம் காமாட்சி அம்மன் ஏகாம்பரேஸ்வரர் ஆலய தைப்பூச திருத்தேரோட்டம்