இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
“பொன்பரப்பியில் மறு வாக்குப்பதிவு நடத்த முடியாது என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது எதிர்பார்த்ததுதான் என்றாலும் தேர்தல் ஆணையத்தின் வெளிப்படையான ஒருசார்பு அணுகுமுறை அதிர்ச்சியளிக்கிறது.
'நூறு விழுக்காடு வாக்காளர்கள் ஒவ்வொருவரும் வாக்களிக்க வேண்டும்; வாக்களிக்காமல் ஒருவரும் விடுபடக்கூடாது' என்று பலநூறு கோடிகளைக் கொட்டி இறைத்துப் பரப்புரை செய்யும் தேர்தல் ஆணையம், பொன்பரப்பியில் சாதி வெறியர்களால் தடுக்கப்பட்ட சுமார் 250 வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை ஏற்க மறுத்திருப்பது தேர்தல் ஆணையம் நடத்திய அப்பட்டமான ஒரு ஜனநாயகப் படுகொலையாகும்.
நேர்மை தவறி வெளிப்படையாக ஆளுங்கட்சிகளுக்கு ஆதரவாகச் செயல்படும் தேர்தல் ஆணையத்திடமிருந்து ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டும். முன்னெப்போதும் இல்லாத அளவில் தேர்தல் ஆணையம் இத்தேர்தலில் கடுமையான விமர்சனங்களுக்கு ஆட்பட்டிருக்கிறது. அந்த அளவுக்கு வெளிப்படையாக ஆளுங்கட்சி ஆதரவுநிலை எடுத்து செயல்படுவது அனைத்து வகை முறைகேடுகளுக்கும் வழிவகுக்கும் என்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பெருங்கவலையுடன் சுட்டிக்காட்டுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.