சென்னை:விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “21 நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு 2 நாள் பயணமாக மணிப்பூர் சென்றோம். மணிப்பூர் முகாம்களில் தங்கி உள்ள 2 தரப்பு பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தோம். மத்திய மற்றும் மாநில அரசுகள், பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாக்க எந்த அக்கறையும் எடுக்கவில்லை என கூறினார்கள்.
குக்கி சமுதாயத்தை சேர்ந்த 60 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் முகாமில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். மெய்தி சமூக மக்கள் 8 ஆயிரம் பேர் முகாம்களில் தங்கி உள்ளனர். அவர்களுக்கு தன்னார்வ குழுக்கள் உணவு, உடை வழங்கி வருகின்றனர். மாநில அரசு போதிய உதவிகளை வழங்கவில்லை. இது குறித்து கோரிக்கை மனுவை குடியரசு தலைவரிடம் காங்கிரஸ் தலைவர் கார்கே தலைமையில் 31 பேர் சந்தித்து வழங்கினோம்.
மணிப்பூர் மக்களுக்கு சுமூகமான சூழ்நிலை வேண்டும். பிரதமர் நேரடியாக சென்று சந்திக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம். ஆனால் இந்திய ஒன்றிய ஆட்சியாளர்கள் மணிப்பூரில் சுமூகமான தீர்வை எதிர்பார்க்கவில்லை என்று தெரிகிறது. பிரதமர் மோடி ஒரு முறை வருத்தத்தை பதிவு செய்தார். ஆனால் கருத்து சொல்ல கூட தயாராக இல்லை. நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் தொடர்ந்து மணிப்பூர் குறித்து விவாதிக்க வேண்டும்.
பிரதமர் விளக்கமளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் கூட பிடிவாதமாக மறுத்து வருகின்றனர். இதனால் நாடாளுமன்றத்தில் கூச்சலும், குழப்பமும் நீடித்து கொண்டு இருக்கிறது. இது வன்மையான கண்டனத்துக்குரியது. மணிப்பூரில் செயற்கையான அமைதி நிலவுகிறது. ஆனால் கிராமப்புறங்களில் வன்முறைகள் தொடர்கின்றது என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர். மணிப்பூர் மாநில அரசு செயலிழந்து கிடக்கிறது.
மணிப்பூர் மாநில முதலமைச்சரை உடனே மாற்ற வேண்டும் என குடியரசு தலைவரிடம் வலியுறுத்தி உள்ளோம். எல்லா நாடுகளிலும் சிறுபான்மை பிரிவினர் என ஒரு சமூக பிரிவினர் இருக்கின்றனர். சிறுபான்மையினரை மதத்தின் அடிப்படையில் அடையாளப்படுத்த பார்க்கிறோம். தமிழ்நாட்டில் நாம் மொழி அடிப்படையில் பார்த்தால் தமிழர்கள் தான் பெரும்பான்மை.
அதில் கிறிஸ்துவர்களும், இஸ்லாமியர்களும் பெரும்பான்மைக்குள் வருவார்கள் என மொழி, இன அடிப்படையில் சீமான் வாதத்தை வைக்கிறார். இந்தியாவில் மத அடிப்படையில் பெரும்பான்மை, சிறுபான்மை அரசியல் நடக்கிறது. ஆர்.எஸ்.எஸ் இந்துக்களை பெரும்பான்மை என்றும் முஸ்லிம் மற்றும் கிறிஸ்துவர்கள் சிறுபான்மை என்றும் பெரும்பான்மை சமூகத்தை சார்ந்தவர்கள் சொல்லும் படி தான் கட்டுபட்டு நடக்க வேண்டும் என அரசியல் செய்கிறார்கள்.