பாஜக தமிழ்நாட்டை குறிவைத்து விட்டது: யார் விராட்டுகிறார்களோ இல்லையோ சிறுத்தைகள் விரட்டும்-திருமாவளவன் சென்னை: சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றிக் கொண்டிருந்தபோது ஆளுநர் ரவி பாதியில் வெளிநடப்பு செய்த சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பேசு பொருளாக மாறியது. தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த ஆளுநர் உரையில் பல வார்த்தைகளை ஆளுநர் ஆர்.என். ரவி தவிர்த்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
மேலும் ஆண்டின் தொடக்கத்தில் ஒரு நிகழ்ச்சியில், "தமிழ்நாடு என்று கூறுவதற்கு பதில் தமிழகம் என்று கூறுங்கள்" என்ற ஆளுநரின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. தொடர்ந்து மாநில அரசுக்கு எதிராக ஆளுநரின் செயல்பாடுகள் உள்ளதாக இன்று விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் ஆளுநர் மாளிகையினை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தின் போது பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், "தமிழ்நாடு ஆளுநராகவே ஆர்.என்.ரவி பொறுப்பேற்று இருக்கக் கூடாது. தமிழ்நாட்டுக்கு எதிராகவும், தமிழ் மக்களுக்கும் எதிராக செயல்படுகிறார். கவர்னர் பதவியில் இருந்து விலகி விட்டு ஆர்.எஸ்.எஸ்-ஸில் சேர்ந்து சிறப்பாக பணியாற்றுங்கள். ஆளுநர் பக்குவமற்ற தன்மையில் இருக்கிறார். முதலமைச்சர் நாகரிகமாக கூறியதையடுத்து சட்டசபையை விட்டு வெளியேறியது தவறு. மானமுள்ளவராக இருந்தால் தூக்கிட்டுத் தொங்க வேண்டும்" என முத்தரசன் சர்ச்சையாகப் பேசினார். தொடர்ந்து பேசிய அவர், "டெல்லிக்கு சென்று அமித் ஷா, மோடி, ஆளுநரிடம் என்ன சதி செய்ய சொல்லி அனுப்பினாலும் அது தமிழ்நாட்டில் எடுபடாது" எனக் கூறினார்.
போராட்டத்தில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், "ஆளுநருக்கு எதிரான நம்முடைய பலத்தைக் காட்ட வேண்டிய தேவை இருக்கிறது. ஆளுநர் சட்டப்பேரவையில் நடந்து கொண்டது மட்டும் பிரச்னை இல்லை. தமிழ்நாட்டிற்கு வந்ததிலிருந்தே பிரச்னை தான். வடிகட்டிய முட்டாள் தான் ஆளுநர். பொது நிகழ்ச்சியில் தொடர்ச்சியாக சனாதனத்தை மட்டுமே பேசுகிறார். தமிழ்நாடு என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அழைக்கப்பட்டு வருகிறது. அண்ணாவிற்கு முன்பாகவே, பெருந்தலைவர் காமராஜர் முன்னெடுத்ததை அண்ணா தன் ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றப்பட்டது.
இது திமுகவிற்கு எதிரானது அல்ல. நாம் எல்லாம் போற்றக்கூடிய சமூக நீதிக்கு எதிரானது. ஆளுநராக நியமிக்கப்படுவர் ஒரு அரசியல் கட்சியாக செயல்படக் கூடாது. ஆனால், முழுமையாக அரசியல்வாதியாக செயல்படுகிறார். சனாதனத்தை நிலைநாட்டுவதே ஆர்.எஸ்.எஸ்-ன் கொள்கை. பாஜக அல்லாத மாநிலத்தில் பாஜகவிற்கு ஆதரவாக இருக்கக்கூடிய ஆட்களை ஆளுநராக நியமிக்கக் கூடாது. தமிழ்நாட்டை பாஜக குறி வைத்து விட்டார்கள். ஆனால், ஒரு முறை கூட 10 சட்டமன்ற உறுப்பினர்களை கூட அனுப்ப முடியவில்லை. யார் விராட்டுகிறார்களோ இல்லையோ சிறுத்தைகள் விரட்டும்" எனக் கூறினார்.
இதனைத்தொடர்ந்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உட்பட போராட்டத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டோரை சென்னை நந்தனத்தில் உள்ள ஓ.எம்.சி.ஏ மைதானத்திற்கு காவல்துறையினர் பேருந்தில் அழைத்துச் சென்றனர். இந்த போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகி ஜி.ராமகிருஷ்ணன் உட்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த கட்சித் தொண்டர்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: இன்னும் 10 ஆண்டுகளில் குழந்தைகளின் கல்வி தலைகீழாக மாற்றப்படும்: அண்ணாமலை