சென்னை விமான நிலையம் வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, “புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் அரசை, மத்திய பாஜக அரசு சூது, சூழ்ச்சி, சதித் திட்டங்களால் சட்டப்பேரவை உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ராஜினாமா செய்யவைத்து அரசை கவிழ்க்கச் செய்துள்ளது. இது அநாகரிகமான போக்கு, இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
தமிழ்நாட்டில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் இதேபோன்ற தில்லுமுல்லு வேலைகளைச் செய்வோம் என ஒரு ஒத்திகை வேலையாகத்தான் இதைச் செய்து காட்டியிருக்கிறார்கள். இத்தகைய போக்கை அனைத்துத் தரப்பு ஜனநாயக சக்திகளும் வேடிக்கை பார்க்காமல் ஒன்றிணைந்து கடுமையாக கண்டிக்க வேண்டும், எதிர்க்க வேண்டும். தமிழ்நாட்டில் இத்தகைய அரசியல் அரங்கேறாமல் தடுக்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது.
இத்தகைய போக்கைக் கண்டித்து பிப்ரவரி 24ஆம் தேதி புதுச்சேரியில் எனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. பாஜக ஆட்சிக்கு வந்தால் 7 தமிழர் விடுதலைசெய்யப்படுவார்கள், ஈழத்தமிழர்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கப்படும் எனக் கருதப்பட்டது.