சென்னை: அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் தொழில் அதிபர் ஆசிஷ் பன்சால். இவருக்குச் சொந்தமாக ஆந்திரா, ஸ்ரீபெரும்புதூரில் வாகன பேட்டரிகளுக்கான அலுமினிய லெட் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இயங்கிவருகின்றன.
இந்தத் தொழிற்சாலைக்கான தலைமை அலுவலகம் சென்னை சேத்துப்பட்டில் உள்ள பிரபல வணிக வளாகத்தின் நான்காவது மாடியில் செயல்பட்டுவருகிறது. இந்நிலையில் கடந்த 10ஆம் தேதி இந்த அலுவலகத்தின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோ லாக்கரில் இருந்த 72 லட்சம் ரூபாய் கொள்ளைபோனது.
இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக நிறுவன உரிமையாளர் அளித்த புகாரின்பேரில் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவந்தனர். கீழ்ப்பாக்கம் உதவி ஆணையர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்ததில் பணத்தைத் திருடிய நபர் திருவல்லிக்கேணியில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அந்த விடுதிக்குச் சென்று காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டபோது, அந்த நபர் திருநெல்வேலி மாவட்டம் பிள்ளையார்நத்தம் பகுதியைச் சேர்ந்த பாண்டுரங்கன் (57) என்பதும், அவர் அன்று அதிகாலை விடுதியை காலி செய்துவிட்டு சென்றதும் தெரியவந்தது.
இதனையடுத்து விடுதியில் அவர் அளித்த செல்போன் எண்ணை காவல் துறையினர் சோதனை செய்தனர். அப்போது அவர் தியாகராய நகரில் உள்ள பிரபல நட்சத்திர உணவக விடுதியில் அறையெடுத்து தங்கியிருப்பது தெரியவந்தது.
பின்னர் அங்கு காவல் துறையினர் சென்றனர். நட்சத்திர உணவக விடுதியில் பாண்டுரங்கன் தங்கியிருக்கும் தளத்தில் மட்டும் மின்சாரத்தைத் துண்டித்தனர். பின் சினிமா பாணியில் நட்சத்திர விடுதியின் ஊழியர் ஒருவரை காபி எடுத்துச் செல்லுமாறு தெரிவித்தனர்.
அவர் அறையின் கதவைத் திறக்கும்போது அதிரடியாகக் காவல் துறையினர் உள்ளே நுழைந்து பாண்டுரங்கனை கைதுசெய்தனர். தன்னை யாரும் அடையாளம் கண்டுவிடக்கூடாது என்பதற்காக அண்ணாநகரில் தான் கொள்ளையடித்த பணத்தில் ஒரு லட்சம் ரூபாயைச் செலவிட்டு பணக்காரர்போல் பேஷியல் செய்துகொண்டு தனது தோற்றத்தையே மாற்றியதாக வாக்குமூலம் அளித்துள்ளார். பேஷியல் செய்ததற்கான ரசீதுகளையும் காவல் துறையினர் பறிமுதல்செய்துள்ளனர்.
பாண்டுரங்கனை கைதுசெய்து, அவர் செலவு செய்த பணம் போக அறை லாக்கரில் பூட்டி வைத்திருந்த சுமார் 61 லட்சம் ரூபாயையும் பறிமுதல்செய்தனர். விசாரணையில் பாண்டுரங்கன் பழைய குற்றவாளி என்பதும், 1981ஆம் ஆண்டு எழும்பூர் காவல் நிலையத்தில் அவர் மீது 16 வழக்குகள் பதியப்பட்டுள்ளதும் தெரியவந்தது.
மேலும், பழைய குற்றவாளியான பாண்டுரங்கன் இறுதியாக 2013ஆம் ஆண்டு கோவை மாவட்டத்தில் கொள்ளையடித்து சிறை சென்றவர். அதன்பின் குற்றச் செயல்களில் ஈடுபடாமல் சொந்த ஊரில் வேளாண்மை செய்துவந்தார். பின்பு கடன் தொல்லையால் இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட பாண்டுரங்கனை காவல் துறையினர் நீதிமன்றத்தில் முன்னிறுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க:சிலை கடத்தல்காரர்களின் சிம்ம சொப்பனனாக உள்ள சிங்கை வாழ் தமிழன் விஜய் குமார்!