தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"தேசிய கல்விக்கொள்கை என்பதே இருக்கக்கூடாது" - முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன்!

தேசிய கல்விக்கொள்கை என்பதே இருக்கக் கூடாது எனவும், கல்வி முழுவதும் மாநிலப் பட்டியலுக்கு வர வேண்டும் எனவும் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் தெரிவித்தார்.

che
che

By

Published : Nov 20, 2022, 10:57 PM IST

சென்னை: இந்திய மாணவர் சங்கம் சார்பில், சென்னையில் தமிழ்நாடு கல்விக் கொள்கை, நீட், கியூட் தேர்வு எதிர்ப்பு, தேசியக்கல்விக்கொள்கை குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன், கல்வியாளர் ஆயிஷா நடராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அரிபரந்தாமன், "தேசிய கல்விக்கொள்கை என்பதே இருக்கக் கூடாது. கல்வி என்பது முழுவதும் மாநிலப்பட்டியலுக்கு வர வேண்டும், ஒத்திசைவுப் பட்டியலில் இருந்து நீக்கப்பட வேண்டும். ஆங்கிலேயர் காலத்திலேயே கல்வி என்பது மாகாணங்களின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது.

ஆனால், அரசியலமைப்புச்சட்டம் வந்த போது மத்திய அரசிற்கான பட்டியலில் பல்கலைக்கழக மானியக்குழு போன்ற அமைப்புகள் சென்றன. அதுவும் நீக்கப்பட்டு, கல்வி சம்பந்தமான கட்டுப்பாடுகள் அனைத்தும் மாநிலத்திற்கு வர வேண்டும். எனவே, தான் தேசியக் கல்விக் கொள்கை இருக்கக்கூடாது, மாநிலக் கல்விக் கொள்கைதான் இருக்க வேண்டும்.

நுழைவுத்தேர்வுகளால் கல்வி என்பது பள்ளிக்கல்விக்குச் சம்பந்தம் இல்லாமல் ஆகி விடுகிறது. 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையில் படிப்பதற்கு மதிப்பு இல்லாமல் செய்து விடுகிறது. அதற்குப் பதில் நீட் , கியூட் போன்றவற்றைப் படித்தால் போதும். தமிழ்நாட்டில் நீட் தேர்வு வேண்டாம் என உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, அதன் பரிந்துரையில் நிறைவேற்றப்பட்ட மசோதா இன்னும் சட்டம் ஆகாமல் இருக்கிறது.

இந்த கருத்தரங்கில், தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக்கல்லூரிகளில் தமிழ்நாடு அரசு நடத்தும் தேர்வின் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடத்தப்பட வேண்டும். மாணவர்களாக இருக்கக்கூடிய நேரத்தில் நுழைவுத் தேர்வுகள் தேவையில்லை. ஆனால், பணிக்குச்செல்லும்போது நுழைவுத்தேர்வுகள் தேவை என கருத்துகள் முன்வைக்கப்பட்டன. கல்வி கற்கும்போது நுழைவுத்தேர்வுகள் தேவையில்லை என்றும் கருத்துகள் முன்வைக்கப்பட்டன" என்று கூறினார்.

உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன், கல்வியாளர் ஆயிஷா நடராஜன் ஆகியோர் பேட்டி

அதனைத்தொடர்ந்து பேசிய கல்வியாளரும், தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கையின் உறுப்பினருமான ஆயிஷா நடராஜன், இந்திய மாணவர் சங்கம் நடத்தும் கூட்டத்தில், தமிழ்நாடு கல்விக்கொள்கையில் இடம் பெற வேண்டிய கருத்துகள் குறித்து ஆலோசித்து பரிந்துரைகளை கொடுக்க வேண்டும் எனக் கருத்துகள் கூறப்பட்டதாக குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: கனமழை எச்சரிக்கை: முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர் விளக்கம்

ABOUT THE AUTHOR

...view details