சென்னை:வன்னியர்களுக்கு 20 விழுக்காடு தனி ஒதுக்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி சென்னையில் பாமகவினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகை தந்த பாமகவினரை காவல்துறையினர் ஆங்காங்கே தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
சென்னை தீவு திடல் அருகே உள்ள மன்றோ சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என முன்னதாக பாமகவினர் அறிவித்திருந்தனர். ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்திற்கு முன்னாள் ரயில்வே துறை அமைச்சர் ஏ.கே. மூர்த்தி, வழக்கறிஞர் பாலு, உள்ளிட்டோர் வருகை புரிந்து காவல்துறையுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின்னர் பல்லவன் சாலையில் இருந்து பாமகவினர் பேரணியாக ஆர்ப்பாட்டம் நடைபெறும் மன்றோ சிலைக்கு வருகை புரிந்தனர்.
பின்னர் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் வன்னியருக்கு தனி இட ஒதுக்கீடு கேட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்பொழுது, வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்பதை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், "வன்னியர் சமுதாயத்திற்கு எத்தனை இடங்கள் கொடுத்துள்ளார்கள் என்ற புள்ளிவிவரம் கேட்டும், 20விழுக்காடு தனி இட ஒதுக்கீடு கேட்டும் இந்த ஆர்ப்பாட்டம் அறவழியில் நடைபெற்றது. இது ஒரு தொடக்கம்தான். வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கேட்டு கடந்த 40 ஆண்டுகளாக மருத்துவர் ராமதாஸ் போராடி வருகிறார்.
முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரைச் சந்தித்து தனி இடஒதுக்கீடு தொடர்பாக ராமதாஸ் கோரிக்கை வைத்தார். கடந்தாண்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியைச் சந்தித்தும் கோரிக்கை வைக்கப்பட்டது. இது அரசியல் பிரச்சினை கிடையாது. தேர்தலுக்காக நிச்சயமாக இதனை செய்யவில்லை. இது எங்கள் உரிமை சார்ந்த பிரச்னையாகும்.