சென்னை: திருவண்ணாமலையை சேர்ந்த ரேவதி செப். 30ஆம் தேதி சென்னை வண்ணாரப்பேட்டையில் வசிக்கும் தனது உறவினர் வீட்டிற்கு அவரது அம்மா கோவிந்தாம்மா உடன் சென்றுள்ளார். அதன்பின் நேற்று பிற்பகல் வண்ணாரப்பேட்டையில் இருந்து பேருந்து மூலம் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இறங்கி அங்கிருந்து ஆட்டோ மூலம் விருகம்பாக்கத்தில் உள்ள மற்றொரு உறவினரை சந்திப்பதற்காக புறப்பட்டார். இதனிடையே அவரது பர்ஸ் திருடப்பட்டது. அடுத்த சில நிமிடங்களில் ரேவதியின் ஏடிஎம் கார்டில் இருந்து ரூ.50,000 ரூபாய் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்துள்ளது.
உடனே ரேவதி கோயம்பேடு பேருந்து நிலைய காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த பர்சில் ஏடிஎம் கார்டு, பணம், ஆதார் கார்டு, பான் கார்டு இருந்ததாக குறிப்பிட்டார். அந்த புகாரின் பேரில் கோயம்பேடு போலீசார் அண்ணா நகர் சைபர் கிரைம் போலீசாரிடம் விசாரணைக்கு மாற்றினர். முதல்கட்ட தகவலில், ரேவதி தனது ஏடிஎம் பின் நம்பராக தனது பிறந்த தேதி வைத்திருந்தது தெரியவந்தது. ஆகவே ஆதார் கார்டில் பிறந்த தேதியை பார்த்த திருடன் எதார்த்தமாக பயன்படுத்தி பணத்தை திருடியிருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.