சென்னை: காங்கிரஸ் எம்.பி.யும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரத்திற்குச் சொந்தமான வீட்டில் இன்று காலை 6 மணி முதல் சிபிஐ அலுவலர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக சென்னை, டெல்லி மற்றும் மும்பை ஆகிய இடங்களில் ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்குச் சொந்தமான இடங்களில் தொடர் சோதனையில் சிபிஐ அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கம் பைகிராப்ட் தெருவில் அமைந்துள்ள ப.சிதம்பரத்தின் வீட்டில் நடைபெறக்கூடிய சிபிஐ சோதனையை காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை நேரில் சென்று கேட்டறிந்தார். இதனையடுத்து வெளியே வந்த செல்வப் பெருந்தகை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது, "காலை 6 மணி முதல் ப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது. ஏற்கெனவே சிபிஐ, ஐடி என பல ஏஜென்சிகள் தொடர்ந்து சோதனை நடத்தியுள்ளன.
ஆனால், தொடர்ந்து சோதனை நடத்துவது எந்த அரசியலமைப்புச் சட்டத்தில் இருக்கிறது என்பது தெரியவில்லை. ஏற்கெனவே எல்லா வழக்குகளும் முடியும் நிலையில் உள்ளன. மூத்த வழக்கறிஞராக உள்ள ப.சிதம்பரம் அதனை முடித்துக்கொண்டிருக்கிறார். சமீபத்தில் உதய்பூரில் நடந்த மாநாடு ஒன்றில் ப.சிதம்பரம் நாட்டின் அரசாங்கம் எப்படி செயல்படுகிறது, பொருளாதாரம் எந்த அளவில் உள்ளது என்று விமர்சனம் செய்திருந்தார்.
இதைப் பொறுத்துக் கொள்ளாமல் சிபிஐ அலுவலர்களை ஏவி சோதனை நடத்துகிறார்கள். இந்த சோதனை ஒரு பழிவாங்கும் நடவடிக்கை. மேலும் புகாரின் அடிப்படையில் சோதனை நடத்துவதாக சிபிஐ அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். சோதனை செய்யலாம் தவறில்லை, மறுபடியும் மறுபடியும் சோதனை நடத்துவது எந்த அளவிற்கு நியாயம் என்பது தான் தெரியவில்லை. மேலும், அரசு பற்றி விமர்சிப்பதால் ப.சிதம்பரத்தின் குரல்வளையை நசுக்க இந்த சோதனை நடத்தப்படுகிறது” எனக் கூறினார்.
சோதனை நடத்தலாம்.. மறுபடியும் மறுபடியும் நடத்துவது நியாயமா? - செல்வப் பெருந்தகை இதையும் படிங்க:சிபிஐ சோதனை கார்த்தி சிதம்பரத்திற்கு முன்கூட்டியே தெரியுமா? - டுவிட்டர் பதிவால் பரபரப்பு