சென்னை:அரசுப் பள்ளிகளை மேலும் வலுப்படுத்தும் ஒரு முக்கிய முயற்சியாக 'நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்' திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
நம்ம ஸ்கூல் பவுண்டேஷனுக்கு தலைவராக நியமிக்கப்பட்டுள்ள டிவிஎஸ் குழுமத் தலைவர் வேணு சீனிவாசன் பேசும்போது, 'இந்தாண்டு மழையில் தண்ணீர் தேங்குவது 80 சதவீதம் குறைந்துள்ளது. ஒரே வருடத்தில் 80 சதவீதம் பணிகளை அரசு சரிசெய்துள்ளது. மீதமுள்ள 20 சதவீதம் பணிகளையும் முடிக்க வேண்டும்.
நான் படித்த காலத்தை விட தற்போது ஆசிரியர்களுக்கு நல்ல சம்பளம் வழங்கப்படுகிறது. ஆசிரியர்களுக்கு நவீன காலத்திற்கு ஏற்ப டிஜிட்டல் முறையில் கல்வி கற்பிக்க பயிற்சியளிக்க வேண்டும். டிவிஎஸ் நிறுவனம் தென்னிந்தியாவில் 2,500 பள்ளிகளை மேம்படுத்த தத்தெடுத்ததில் தமிழ்நாட்டில் மட்டும் 2000 பள்ளிகள் உள்ளன.
சர்வதேச தரத்தை ஒப்பிடுகையில் 10ஆம் வகுப்பு முடிக்கும் மாணவர்களுக்கு 6ஆம் வகுப்பு முடித்த அளவிற்கான கல்வியறிவே இருக்கிறது. அண்ணா பல்கலை முன்னாள் மாணவர்கள் வழங்கும் நிதியை சிறப்பாகப் பயன்படுத்துகிறது. இந்த குறுகிய காலத்தில் சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை கொண்டு வந்ததற்கு நாங்கள் நன்றிக்கடன் பட்டுள்ளோம். அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதற்கு அனைவரும் இணைந்து பாடுபட வேண்டும்' எனத் தெரிவித்தார்.