சென்னையில் 2 ஐபிஎஸ் அலுவலர்கள் உட்பட 114 காவலர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டாலும் சோர்வில்லாமல் உழைப்பதாக காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் கரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில், மாநில மத்திய அரசு இணைந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
குறிப்பாக, சென்னையில் ஐந்து ஆயிரத்து 230 பேர் கனோராவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக ஆங்கில நாளிதழ் ஒன்றுக்குக் காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் அளித்த பேட்டியில் கூறியதாவது, "கரோனா பரவலைத் தடுக்க சுகாதாரத்துறை, வருவாய் துறை மாநகராட்சி போன்று காவல்துறையினரும் போராடி வருகின்றனர். குறிப்பாக, ஊரடங்கில் பொதுமக்கள் வெளியே வராமல் தடுப்பது, கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது, மேலும் கரோனா பாதித்த நபரின் விவரங்களைச் சேகரிக்கும் பணி காவல்துறையினருக்குச் சவாலானதாக இருந்தது.
ஊரடங்கு அறிவித்தவுடன் பொதுமக்களுக்கு ஊரடங்கைப் பற்றி புரியவைத்து அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்த காவல்துறையினருக்கு மிகவும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது.
சென்னையில் கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட இரண்டு ஐபி.எஸ் அலுவலர்கள் உள்பட 114 காவலர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அவர்கள் கூடிய விரைவில் குணமடைந்து மீண்டும் பணிக்கு திரும்புவர்.
ஆபத்துக்கு நடுவில் பணிபுரிவதே காவல் துறையினரின் பணி. காவலரைக் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் பணிக்கு அனுப்பினாலும் தயங்காமல் சென்று பணியில் ஈடுபடுவார்கள்.
பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு முகக்கவசம், கையுறை, நோய் எதிர்ப்பு சக்திக்காக உணவு, மாத்திரைகள் தொடர்ந்து வழங்க ஏற்பாடு செய்துள்ளோம். இதுமட்டுமில்லாமல் காவல் நிலையம், குடியிருப்பு பகுதிகள் போன்ற இடங்களில் கிருமி நாசினி மருத்து தெளித்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறோம்.
இதுமட்டுமில்லாமல், கடந்த 50 நாள்கள் ஊரடங்கில் பொதுமக்கள் தகுந்த ஒத்துழைப்பு கொடுத்தனர். வடமாநில தொழிலாளர்களுக்கு அறிவுரை வழங்கி வருகிறோம். அவர்களைச் சொந்த ஊருக்கு அனுப்ப அரசு ஏற்பாடு செய்து வருகிறது.
இதுபோன்ற சூழ்நிலையில், களத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவலர்களை ஊக்குவிக்கும் பணியில் காவல் ஆணையராக நான் செயல்பட்டு வருகிறேன் என்றார்.
இதையும் படிங்க : 'பழக்கடைகளை சேதப்படுத்திய ஆணையர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?' - மனித உரிமை ஆணையம்