இதுகுறித்து பேரண்ட் சர்க்கிள் அமைப்பின் நிறுவனர், மேலாண்மை இயக்குனர் நளினா ராமலட்சுமி வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், "கரோனா பாதிப்பின் காரணமாக, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், பெற்றோர்களின் மனநிலையை அறிவதற்காக ஆன்லைன் மூலம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. இதில், சுமார் 12 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர்.
கருத்துக்கணிப்பின் போது, பள்ளி குழந்தைகளுடன் விளையாட்டு, பிறந்தநாள் விருந்து, மால்கள், திரைப்படங்கள், உணவகங்கள் செல்வது, சிறப்பு வகுப்புகளுக்குச் செல்வது, உடற்பயிற்சி, பொதுப் போக்குவரத்து, கோடை விடுமுறை உள்ளிட்டவற்றை உள்ளடக்கி ஒட்டுமொத்த சர்வே நடத்தப்பட்டது.
ஹோம் ஸ்கூலிங் முறைக்கு 15 விழுக்காடு ஆதரவு
பள்ளிகள் திறந்தாலும் தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப 92 விழுக்காடு பெற்றோர்கள் விரும்பவில்லை. கரோனா முடிவுக்கு வந்த பின்னர், பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப விரும்புவதாக 56 விழுக்காடு பேர் கருத்து தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், 8 விழுக்காடு பெற்றோர் உடனடியாக தங்கள் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்புவதற்குத் தயாராக உள்ளனர்.
வீட்டிலிருந்து பிள்ளைகளைப் படிக்கும் ஹோம் ஸ்கூலிங் முறை நம் நாட்டில் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. இருந்தாலும், ஆச்சரியமூட்டும் வகையில், 15 விழுக்காடு பேர் இந்த முறைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
குழந்தைகளைப் பாதுகாப்புடன் அனுப்ப அனுமதிக்கும் பெற்றோர்கள்
கரோனா அச்சத்தின் காரணமாக, 64 விழுக்காடு பெற்றோர்கள் உணவகங்கள், மால்கள், திரையரங்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளனர். ஒரு விழுக்காடு பேருக்கு குறைவானவர்கள் மட்டுமே இங்குச் செல்ல தயாராக உள்ளனர். பாதுகாப்புடன் மால்கள் செயல்பட்டாலும், 50 விழுக்காடு பேர் அங்கு செல்ல விரும்பவில்லை.
அதேபோன்று, 49 விழுக்காடு பேர் உணவகங்களுக்குச் செல்ல விரும்பவில்லை. தகுந்த இடைவெளியைச் சரியாக கடைப்பிடித்தால், தங்கள் குழந்தைகளை நண்பர்களுடன் பூங்காக்களுக்கு அனுப்புவதற்கு, 35 விழுக்காடு பேர் விருப்பம் தெரிவிக்கின்றனர். குழு விளையாட்டினை பெற்றோர்கள் அதிகளவில் விரும்பவில்லை.
இந்தியளவில் பள்ளிகள் மறுபடியும் திறந்த பிறகு, 56 விழுக்காடு பெற்றோர்கள், ஒரு மாதமாவது சூழ்நிலையைக் கவனித்த பின்னர் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப விருப்பம் தெரிவித்துள்ளார்கள். அடுத்த ஆறு மாதங்களுக்குப் பிள்ளைகளை அனுப்ப, 21 விழுக்காடு பெற்றோர் தயாராக இல்லை.
சென்னை மக்களின் கருத்துக் கணிப்பு
சென்னையைப் பொறுத்தவரை பள்ளிகள் மறுபடி திறக்கப்பட்டால் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பும் அதற்கு முன்பாக ஒரு மாதமாவது உற்று நோக்க வேண்டும் என்று, 54 விழுக்காடு பேர் கருதுகின்றனர். சென்னையைப் பொறுத்தவரை அடுத்த மூன்று மாதங்களுக்கு உணவகங்களுக்குச் செல்லப் போவதில்லை என, 86 விழுக்காடு பெற்றோர்கள் கூறுகின்றனர். குடும்பச் சுற்றுலா பயணம் செல்வதை, 63 விழுக்காடு பேர் தவிர்க்கின்றனர்.
குழந்தைகள் கை குலுக்குவதை விட, வணக்கம் சொல்வது சிறந்தது என, 69 விழுக்காடு பெற்றோர்கள் தெரிவித்துள்ளார்கள்" என, அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:இந்தியாவில் கரோனா பாதிப்பாளர்கள் 30 விழுக்காடு மீட்பு!