சென்னை:திருநங்கைகள் முப்பெரும் விழாவின் கல்வி மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு குறித்த அமர்வு சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்றது. திருநங்கைகளின் வரவேற்பு நடனத்துடன் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திண்டுக்கல் லியோனி முன்னிலையில், யுனஸ்கோ நிறுவனத்தின் மூலம், சகோதரன் அமைப்பினரால் நடத்தப்பட்ட, பள்ளி சூழலில் திருநங்கைளுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்த ஆய்வு விபரங்கள் ஒலி ஒளி வடிவில் சமர்ப்பிக்கப்பட்டது.
60 சதவீதம் மாறியப்பாலின மாணவர்கள் கேலிக்கும், 40 சதவீதம் மாணவர்கள் பள்ளி மற்றும் உயர்நிலை பள்ளிகளில் வன்கொடுமைகளை சந்தித்துள்ளனர். இது எங்குமே அறிவிக்கப்படவில்லை. 52 சதவீதம் முதல் 56 சதவீதம் மாணவர்கள் பள்ளி இடைவிலகலுக்கு உள்ளாகின்றனர்.
எனவே கல்வி பாடத்திட்டங்களில் மாறுபட்ட பாலின அடையாளங்கள் குறித்து கற்பிக்கப்பட வேண்டும். வன்கொடுமைக்கு எதிரான கொள்கைகள் கல்வி சூழலில் உருவாக்கப்பட வேண்டும். மாணவர்கள் வன்கொடுமைகளை குறித்து புகார் தெரிவிக்கும் வசதிகள் ஏற்படுத்தவேண்டும். ஆசிரியர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.