சென்னை: தமிழ்நாடு முழுவதும் நேற்று (ஜூலை 24) அன்று 50 ஆயிரம் இடங்களில் 32 வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இது தொடர்பாக சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் இன்று நடைபெற்ற 32 வது மெகா தடுப்பூசி முகாமில் 18 லட்சத்து 8 ஆயிரத்து 600 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. அதில் 11 லட்சத்து 17 ஆயிரத்து 471 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி மட்டுமே செலுத்தப்பட்டுள்ளது என்றார்.
மேலும் தமிழ்நாட்டில் 18 வயதினருக்கு மேல் உள்ளவர்கள் 95.59 சதவீதம் செலுத்திக்கொண்டுள்ளனர் என்றும் 11 கோடியே 89 லட்சத்து 61 ஆயிரத்து 343 (11.89 கோடி ) தடுப்பூசிகள் தமிழ்நாட்டில் இதுவரை செலுத்தப்பட்டுள்ளன. மேலும் 4.68 கோடி பேர் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார்.
தொடர்ந்துப் பேசிய அவர், மாவட்ட அளவில் தடுப்பூசி போடும் பணியை அதிக படுத்தி உள்ளோம் என்றும் நாட்டின் 75ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு இன்னும் 65 நாட்கள் மக்கள் பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக செலுத்திக்கொள்ளலாம் என்றார். செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க அனைத்து விமான நிலையங்களில் இருந்து வரும் விளையாட்டு வீரர்களுக்கு குரங்கு அம்மை பரிசோதனை செய்ய அனைத்து ஏற்பாடுகளையும் செய்து உள்ளோம் என கூறினார்.
இதையடுத்து மெரினாவில் இருந்து கடலுக்குள் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவாக பேனா போன்ற கட்டமைப்பை அமைப்பது தொடர்பான செய்தியாளரின் கேள்விக்கு ”அதிகாரப்பூர்வ அறிவிப்பை அரசு இன்னும் வெளியிடவில்லை”. அது வெறும் பத்திரிகைகளில் வந்த செய்தி மட்டுமே என அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்தார்.
இதையும் படிங்க:நம்பி கோயில் அருகே நீரோடையில் மூழ்கி மருத்துவக் கல்லூரி மாணவர் உயிரிழப்பு