சென்னை:பேரூராட்சிகளில் ஊழலில் சிக்கி, அவர்களில் எத்தனை பேர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எத்தனை பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று பேரூராட்சிகள் ஆணையரிடமும், பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய ஆசிரியர்கள், ஊழியர்கள் குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநரிடனும் ஆர்.பெரியசாமி என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விளக்கம் கேட்டிருந்தார். அதற்கு சரியான பதில்கள் அளிக்கப்படாததால், அவர் மாநில தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த மேல்முறையீடு மனுவை தகவல் ஆணையர் எஸ்.முத்துராஜ் விசாரித்தார். கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வந்த வழக்கில், மாநில தகவல் ஆணையம் தீர்ப்பு வழங்கி, தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரைகளையும் வழங்கி உள்ளது.
பேரூராட்சிகளில் 102 பேர் நீக்கம்
பேரூராட்சிகள் ஆணையத்தின் பொது தகவல் அலுவலர் அளித்த தகவலில் 102 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் . அதில் ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் பேரூராட்சிகளில் 42 ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதர குற்றங்களுக்காக 60 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் .
பாலியல் குற்றச்சாட்டில் பள்ளி ஆசிரியர்கள்
பாலியல் குற்றங்களுக்காக 232 பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் பல்வேறு பாலியல் வழக்குகள் பல்வேறு நிலைகளில் நிலுவையில் உள்ளன.
போக்சோ வழக்கு மற்றும் ஊழல் வழக்குகளில் சிக்கி பணியிடை நீக்கம் செய்யப்படும் நபர்களுக்கு தொடர்ந்து சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. லஞ்ச வழக்குகளிலும், போக்சோ வழக்குகளிலும் சிக்கும் அரசு ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படும்போது, முதல் 90 நாட்களுக்கு 50 விழுக்காடு ஊதியம், பிழைப்பூதியம் என்ற பெயரில் வழங்கப்படுகிறது. அந்த தொகை 90 இல் இருந்து 180 நாட்கள் வரை 75 விழுக்காடும், 180 நாட்களுக்கு பிறகு முழு ஊதியமும் வழங்கப்படுகிறது.