திருவள்ளூர்:அமெரிக்க கப்பற்படையைச் சேர்ந்த இராணுவ தளவாட கப்பலான ‘சார்லஸ் ட்ரூ’ இந்திய பசுபிக் கடல் பகுதியில் நிலை நிறுத்தப்பட்டிருக்கும், அமெரிக்கா கப்பற்படை கப்பல்களுக்கு தளவாட உதவிகள் செய்து வருகிறது. குறிப்பாக உணவு, எரிபொருள், கப்பல் பாகங்கள், மெயில் சேவை உள்ளிட்ட சேவைகளை வழங்கும் கப்பலாக செயல்பட்டு வருகிறது.
இது அமெரிக்க படைகளுக்கு மட்டுமல்லாமல், இந்திய பசிபிக் பகுதியில் உள்ள பிற நட்பு நாட்டின் கப்பல்களுக்கும் இது போன்ற உதவிகளை செய்து வருகிறது. இந்த கப்பல் பழுதடைந்துள்ளதால், சரி செய்வதற்காக சென்னை வந்துள்ளது. அதிலும் அமெரிக்க கப்பற்படையை சேர்ந்த இராணுவ தளவாட கப்பல் முதன்முறையாக இந்தியாவில் பழுது பார்க்க வந்துள்ளது.
சென்னையை அடுத்த காட்டுப்பள்ளியில் உள்ள எல் அண்ட் டி கப்பல் கட்டும் தளத்திற்கு வந்தடைந்த இந்த கப்பலை, பாதுகாப்பத் துறை செயலாளர் அஜய்குமார் வரவேற்று பார்வையிட்டார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், “இந்தியா கப்பல் கட்டும் துறையில் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. அமெரிக்க கடற்படைக்காக சமீபத்தில் எல் அண்ட் டி நிறுவனம் புதிய கப்பலை கட்டி வழங்கியது.
ராணுவ அமைச்சர் மற்றும் உயர் அலுவலர்கள், அமெரிக்க ராணுவ அமைச்சர் மற்றும் உயர் அலுவலர்களுடன் இரண்டு முறை பேச்சு வார்த்தை நடத்தினர். இதனைத்தொடர்ந்து அமெரிக்க கடற்படை கப்பல்கள் இந்தியாவில் உள்ள கப்பல் கட்டுமான நிறுவனத்தில் பழுது மற்றும் பராமரிப்பு சேவைக்காக அனுப்புவது குறித்து முடிவு செய்யப்பட்டது.
இதன் பேரில் அமெரிக்க கடற்படை கப்பல், எல் அண்ட் டி கப்பல் கட்டுமான நிறுவனத்திற்கு முதல்முறையாக இந்தியா மற்றும் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளது. இது இந்தியா - அமெரிக்கா இடையே உள்ள நெருங்கிய உறவு வளர்ந்து வருவதையும், விரிவடைவதையும் காட்டுகிறது.