தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை மாநகராட்சியின் கடந்தாண்டு வசூல்? - நிலுவைத் தொகை வசூலிக்க புதிய திட்டம்!

சென்னைக்கு உட்பட்ட பகுதிகளில் வசூலித்த நிதி குறித்தும், அடுத்தாண்டிற்கான திட்டங்கள் குறித்தும் மாநகராட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.

Chennai Corporation
சென்னை மாநகராட்சி

By

Published : Apr 4, 2023, 11:21 AM IST

சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நிர்வாக ரீதியாக 15 மண்டலங்களும், 200 வார்டுகளும் உள்ளன. அவற்றில், மாநகராட்சிக்கான நிதி ஆதாரமாகப் பொதுமக்களிடம் இருந்து சொத்து வரி மற்றும் தொழில் வரி வசூலிக்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு வசூலிக்கும் வரி குறித்த விவரங்களை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

விழிப்புணர்வு: சொத்து வரியினை முறையாகச் செலுத்த வேண்டும் என்பதற்காகக் கட் செவி தகவல் (Whats app), பெருநகர சென்னை மாநகராட்சி நிறுவியுள்ள அறிவிப்புப் பலகைகளில் (Vishual Media Display), திரையரங்குகளில் சொத்து வரி தொடர்பாக விழிப்புணர்வு படம் ஒளிபரப்புதல், குப்பை அகற்றும் வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள ஒலிபெருக்கி மற்றும் பண்பலை அலைவரிசை ஆகியவை மூலம் சொத்துவரி செலுத்த மாநகராட்சி கோரிக்கை வைத்து வருகிறது.

மேலும் அஞ்சல் துறை மூலம் அறிவிப்புகள் சார்வு செய்தல் மற்றும் செய்தித்தாள்களில் விளம்பரங்கள் மூலம் வெளியிடுதல் ஆகியவற்றின் மூலம் சொத்துவரி செலுத்துமாறு சென்னை மாநகராட்சி தொடர்ந்து விழிப்புணர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு வசூல்: இந்த நிலையில் 2022 - 2023 ஆம் நிதி ஆண்டு கடந்த 31 ஆம் தேதி உடன் முடிவடைந்தது, கடந்த நிதி ஆண்டில் சொத்து வரி 1522.86 கோடி மற்றும் தொழில் வரி 521.74 கோடி என மொத்தம் 2044.6 கோடி மாநகராட்சி சார்பில் வசூலிக்கப்பட்டுள்ளது. 1500 கோடி சொத்து வரி வசூலிக்க வேண்டும் என மாநகராட்சி இலக்கு வைத்திருந்த நிலையில் 1522.86 கோடி வசூலிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக மார்ச் 30 ஆம் தேதி வரை 1467.47 கோடி மட்டுமே வசூலிக்கப்பட்டு இருந்த நிலையில், மார்ச் 31 ஆம் தேதி (கடைசி நாள்) மட்டும் 55.39 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. அதே போல் மார்ச் 30 ஆம் தேதி வரை 483.34 கோடி வசூலித்து இருந்த நிலையில் கடைசி நாள் மட்டும் 38.40 கோடி வசூலாகியுள்ளது. கடைசி தினம் மட்டும் தொழில் வரி, சொத்து வரி சேர்த்துக் கிட்டத்தட்ட 93.79 கோடி மக்கள் வரி செலுத்தி உள்ளனர்.

மாநகராட்சி சாதனை: கடந்த ஆண்டிற்கு முந்தைய நிதி ஆண்டு (2021 - 2022) பொறுத்த வரையிலும் சொத்து வரி 778.07 கோடி, தொழில் வரி 462.35 கோடி என 1240.42 கோடி வசூலிக்கப்பட்டன. கிட்டத்தட்ட 800 கோடி 2021 - 2022 நிதி ஆண்டை விட கடந்த நிதி ஆண்டில் வரி வசூலிக்கப்பட்டு உள்ளது. 2018 - 2019 நிதி ஆண்டில் அதிகமாகச் சொத்து வரி (979.94 கோடி) வசூலிக்கப்பட்டு இருந்த இருந்த நிலையில் கடந்த ஆண்டு அதிக வசூல் செய்து மாநகராட்சி சாதனை செய்துள்ளது.

நிலுவை தொகை: சொத்துவரியினை நீண்ட நாட்கள் செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ள முதன்மையான 100 சொத்து உரிமையாளர்களின் பட்டியல் மற்றும் நீதிமன்ற வழக்கு நிலுவையின் காரணமாகச் சொத்துவரி செலுத்தத் தடை பெற்று வசூல் செய்ய இயலாத பட்டியலை மாநகராட்சி சமீபத்தில் இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது. இதில் நீண்ட நாட்கள் செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ள பட்டியலில் வேளச்சேரி, தி நகர், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட இடங்களில் இருக்கும் சரவணா ஸ்டோர்ஸ், சரவணா தங்க நகை மாளிகை, ஹோட்டல் குரு உள்ளிட்ட பெரிய நிறுவனங்களும் உள்ளது.

நீதிமன்ற வழக்கு நிலுவையின் காரணமாக சொத்துவரி செலுத்த தடை பெற்ற பட்டியலில் தன்ராஜ் பைட் ஜெயின் கல்லூரி, தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபை, பிருந்தா தியேட்டர், செல்லம்மா கல்லூரி, ஏ.எம் ஜெயின் கல்லூரி உள்ளிட்ட பல கல்வி நிறுவனங்களும், தனியார் நிறுவனங்களும் இந்த பட்டியலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

நிலுவை தொகை வசூலிக்க புதிய திட்டம்: சென்னை மாநகராட்சியில் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக 44 ஆயிரத்து 436 சொத்துடமை தாரர்கள் 245 கோடி ரூபாய் வரி நிலுவையில் வைத்துள்ளனர். இதில் பலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளதால் மாநகராட்சிக்கு வரி நிலுவைத்தொகை ஆண்டிற்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஒரு முறை சிறப்பு நிகழ்வாக, 5 ஆண்டுகளுக்கு மேலாக சொத்து வரி நிலுவைத் வைத்துள்ளவர்கள் 3 மாத காலத்திற்கு நிலுவைத் தொகை செலுத்தினால் 20% வரை வரி சலுகை வழங்க வாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் அரசு அரசாணை வெளியிட வேண்டும் என அரசுக்கு மாநகராட்சி கோரிக்கை வைத்துள்ளது.

இந்த நிதியாண்டு இலக்கு: 2023 - 2024 ஆம் நிதி ஆண்டிற்கு சொத்து வரி ரூபாய் 1,680 கோடியும், தொழில் வரி ரூபாய் 500 கோடியும் வசூலிக்க மாநகராட்சி இலக்கு வைத்துள்ளது. அதுமட்டுமின்று இந்த நிதி ஆண்டிற்கான சொத்து வரியை ஏப்ரல் 15-குள் செலுத்தி 5% செலுத்தும் வரியில் இருந்து ஊக்கத் தொகையாக பெற்று பயனடையுமாறு மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதையும் படிங்க: LSG vs CSK: "சிக்ஸர்" ட்ரீட் கொடுத்த தோனி.. சென்னை அணி அபார வெற்றி

ABOUT THE AUTHOR

...view details